தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க. சந்திக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதுபற்றி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தி.மு.கவிற்கு ஆலோசனைகளைக் கூற நியமிக்கப்பட்டிருக்கும் பிகே டீம் பல்வேறு அதிரடி மாற்றங்களை திமுகவில் கொண்டு வர திட்டம் போட்டு வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாக சொல்கின்றனர்.
சமீபத்தில் நடந்த ஆந்திரா சட்டசபை தேர்தலிலும்,டெல்லி சட்டமன்றத் தேர்தல் ரிசல்டிலும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பிகேவின் அடுத்த வியூகம் தமிழகத்தில் ஸ்டாலினுக்கும், மேற்கு வங்காளத்திற்கு மம்தாவுக்கும் ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தை அறிந்து அதை முறியடிக்கும் விதமாக அதிமுகவும் பலே பிளானோடு இருப்பதாக சொல்லப்படுகிறது. பிகேவின் அரசியல் ஆலோசனை நிறுவனத்தைப்போல தமிழகத்தில் புதிதாக மற்றொரு கார்ப்பரேட் நிறுவனம் எடப்பாடியை முதல்வராகும் பிளானில் வந்துள்ளதாம், அந்த கம்பெனியின் பெயர் டெமோஸ் இந்தியா , இந்த நிறுவனம் 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களத்தில் தனது பணியைத் தொடங்கிருப்பதாக சொல்கின்றனர்.
இதுதொடர்பாக அரசியல் களத்தில் பணியாற்ற ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தையும் வெளிப்படையாக வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆளும் அதிமுக அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் புதிய வியூகத்துடன் களமிறங்க உள்ளது.
Discussion about this post