பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்ட மாணவி அமுல்யாவை ஜாமீனில் வெளியே அனுப்பினால் சுட்டுக் கொல்வோம் என்று இந்து அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கர்நாடகாவில் சமீபத்தில் எம்.ஐ.எம் கட்சியின் தேசிய தலைவர் ஓவைசி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அமுல்யா என்னும் மாணவி பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்டார். இதனால் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரை போலவே கர்நாடகாவிலும் ஆராத்ரா என்ற மாணவி காஷ்மீர் விடுதலை பதாகையை குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏந்தி வந்தார். இதனால் அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த போராட்டக்காரர்களைக் கண்டித்து நேற்று பெல்லாரி மாவட்டம் ஹொசபேட் பகுதியில் இந்து அமைப்பான ஸ்ரீராம சேனா போராட்டம் நடத்தியது. இதில் பேசிய இந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான சஞ்சீவமரடி, ’பெங்களூரிவில் குடியுரிமை சட்ட போராட்டத்தில் மாணவி அமுல்யா பாகிஸ்தான் வாழ்க எனக் கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப் போல மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது. அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் இருவரையும் சுட்டுக்கொல்வோம். அவர்களைச் சுடுவோருக்கு ரூ.10 லட்சம் பரிசளிப்போம்’ என்று தெரிவித்தார்.
பொது மேடையில் பெண்களுக்கு இந்து அமைப்பு கொலை மிரட்டல் விடுத்தது கர்நாடக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post