அயோத்தி தீர்ப்பு வெளியான சமயத்தில் இந்தியாவில் பிரளயமே ஏற்படும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களின் ஆசையில் மண் விழுந்தது. கொடூர குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எங்கும் வன்முறை நடந்ததாகத் தகவல் இல்லை.
வன்முறை நிகழ்ந்தால், பிரச்சனை திசைமாறும் ஆபத்து இருப்பதை போராட்டக்காரர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் ரத்தவெறி பிடித்த கும்பல் சும்மா இருக்குமா என்ன!
டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் குண்டர்கள் புகுந்து, கண்ணில் பட்ட மாணவ, மாணவியரை, பேராசிரியர்களை தடிகளால் தாக்குகிறார்கள். ஜாமியா பல்கலையில் நூற்றுக்கணக்கான போலீசார் வேடிக்கை பார்க்க, ஒருவன் மட்டும் கண்மூடித்தனமாக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. கொஞ்சமும் நடவடிக்கை இல்லை.
வன்முறைக்கு விதைபோட்டது யார்?
அதிலும் ஒரு காவல் அதிகாரியின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து மிரட்டும் அளவிற்கு வன்முறை உச்சத்தைத் தொட்டுள்ளது. நாட்டின் தலைநகரில், அதுவும் ஒரு வல்லரசு நாட்டின் அதிபர் முகாமிட்டுள்ள நிலையிலேயே இப்படி கோரத்தாண்டவம் ஆடுகிறார்கள் என்றால், இவர்களது சிந்தனையும், செயலும் எந்தளவுக்கு விஷமாக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம்.
இது ஏதோ மத ரீதியான பிரச்சனையல்ல. கோடிக்கணக்கானோர் அண்ணன், தம்பிகளாக வாழ்ந்துவரும் இந்தத் தேசத்தின் பொது அமைதிக்கு விடுக்கப்பட்ட சவால்.
இந்த அகோரிகளின் அகோரப் பசிக்கு இரையாகாமல் இருப்பதும்,. இது பற்றிய விழுப்புணர்வை தெரிந்தவர்கள் மத்தியில் இயன்றவரை ஏற்படுத்துவதும்..நாட்டு நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்களின் முன்னுள்ள கடமையாகும்…
Discussion about this post