காவிரி விவசாயிகள் நலச் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன் திருச்சி சுற்றுலா மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்தார்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதன் பின்னர் மன்னார்குடி ரங்கநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 2013ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தினோம். அதைவிட மகிழ்ச்சி தற்போது அதிகமாக கிடைத்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் டெல்டா மாவட்டங்கள் அழிந்து விடும் என்ற அச்சம் இருந்தது.
ஆனால் சேலத்தில் அறிவித்த 10 நாட்களில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மசோதாவை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த செயல் வீரர் என்பதை வெளிக்காட்டி உள்ளார்.
பொதுவாக ஒரு மசோதா நிறைவேற மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகும். ஆனால் வேகமாக செயல்பட்டு உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி அரசிதழில் வெளியிடச் செய்து உள்ளார்.
இதன்மூலம் சோழநாடு சோறுடைத்து என்ற வார்த்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். டெல்டா மாவட்டங்களுக்கு நிரந்தர ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக வரும் மார்ச் 7ஆம் தேதி திருவாரூரில் அம்மா அரங்கத்தில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூர் உள்ளிட்ட சில பகுதிகள் விடுபட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஆனால் அவ்வாறு இல்லை. மசோதா வெளிவந்த பின்னர் இதன் விபரம் தெரியவரும். அப்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் தீரும்.
அந்த மசோதாவில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரியை நிரந்தர அமைப்பாக்ககூடிய அளவுக்கு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்றவற்றால் பூமிக்கடியில் இருக்கும் வாயுவை வெளியில் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதுபோல் ஆந்திராவில் ஆறு முதல் ஏழு அடி வரை கடல் நீர் உள்ளே புகுந்து உள்ளது.
இதனால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஒரு மீட்டர் மட்டுமே மணல் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் 10 முதல் 20 மீட்டர் ஆழம் வரை குழி தோண்டி மண் அள்ளுகின்றனர். மணல் அள்ளுவதை அரசே மேற்கொள்ள வேண்டும்.
தனியாருக்கு விடக்கூடாது. இது தொடர்பாக திருவாரூரில் நடக்கும் பாராட்டு விழாவின்போது முதலமைச்சரி வலியுறுத்துவோம் என்றார்.
இந்த சந்திப்பின் போது சங்கத் தலைவர் ராஜாராம், காவிரி டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சத்யநாராயணன், நிர்வாகிகள் வரதராஜன், புலியூர் நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Discussion about this post