திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உடைந்தது. இதற்கு பதிலாக தற்காலிக ஏற்பாடுகள் மூலம் உடைப்பு சரிசெய்யப்பட்டது.
சேதமடைந்த தடுப்பணைக்கு பதிலாக அருகில் 387.60 கோடி ரூபாய் செலவில் புதிதாக தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவடைய வேண்டும்.
இந்நிலையில் இந்த பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுமான பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கி கூறினர்.
மேலும் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா பதவி கொடுக்கவேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் கூறியது தொடர்பாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்; ராஜ்யசபா தேர்தலில் யார்? யார்? போட்டியிடுவது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும். சீட்டு கேட்பதற்கு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.
Discussion about this post