தில்லி மதக்கலவரத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். மத நம்பிக்கை காரணமாக மக்கள் கொலை செய்யப்படும் சூழல் கொடூரமானது. ஆனாலும், இது திடீர் நிகழ்வு அல்ல. தனது அடையாளத்துக்கு மாறான வேறொரு அடையாளத்தை கொண்டுள்ளவர்களை சக மனிதர்களாக ஏற்காத சூழல் ஒரே நாளில் உருவாக்கப்படுவது அல்ல. அது கட்டுக்கதைகள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்கள் மூலம் மெல்லக் கொல்லும் விஷமாக மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்படுகிறது!
மதம் தொடர்பான கட்டுக்கதைகளை பரப்புவோரையும், மாற்று நம்பிக்கைகள் குறித்த வெறுப்பை பரப்புவோரையும் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தாமல் – டில்லியில் நடப்பது போல, வெறுப்பு வன்முறையை காலம் கடந்த பின்னர் தடுக்க முயலக் கூடாது.
“என்ன செய்ய வேண்டும்?”
1. “தமிழ்நாடு அரசு”
மதவெறுப்பு திட்டமிட்டு திணிக்கப்படுவதை முன்கூட்டியே தடுக்க வேண்டும். எந்தவொரு மதத்தை குறித்தும் பொய்யான கட்டுக்கதைகளையும், வேறு ஏதோ ஒரு இடத்தில் வேறு ஏதோ ஒரு காலத்தில் நடந்த நிகழ்வுகளை தற்காலத்தில் நடப்பது போன்ற வெறுப்பு பிரச்சாரங்களையும், மற்றவரது மத நம்பிக்கைகள் குறித்த இழிவான கருத்துகளையும், பொய்யான புனைவுகளையும் சமூக ஊடகங்களில் பரப்புவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மற்ற நாடுகள் செய்வது போன்று – வெறுப்பு பிரச்சாரங்களை, குறிப்பாக சமூக ஊடகங்களில் நடக்கும் வெறுப்பு பிரச்சாரங்களை அரசாங்கம் தாமாக முன்வந்து கண்காணிக்க வேண்டும். அத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களை ஆவணப்படுத்தி, வெறுப்பு குற்றவாளிகளை உடனுக்குடன் தமிழ்நாடு அரசு தண்டிக்க வேண்டும்.
2. “இந்திய அரசு”
இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை தடுப்பதற்கு மட்டும் தான் வலிமையான SC/ST வன்கொடுமை சட்டம் உள்ளது.
இந்நிலையில், எல்லா பிரிவு மக்களுக்கும் எதிரான வெறுப்பு பேச்சுகளை தடுப்பதற்கான சட்டத்திருத்தத்தை 2017 ஆம் ஆண்டில் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது (Law Commission of India, Report No.267). வெறுப்பு பேச்சுகளை குற்றமாக்கும் புதிய திருத்தங்கள் IPC 153C, IPC 505A முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி புதிய குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவை (The Criminal Laws (Amendment) Bill) மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
3. “தனிமனிதர் பொறுப்பு”
மதம் குறித்த வெறுப்பு பிரச்சாரம் மிக மிக ஆபத்தானது. எனவே, எந்தவொரு மதவெறுப்பு கருத்துகளையும் சமூக ஊடகங்களில் பகிராதீர். உங்களுக்கு வரும் பொய்யான மதக் கட்டுக்கதைகளை மற்றவர்களுக்கு Forward செய்யாதீர்.
சாதாரணமாக நினைத்து பகிரப்படும் வெறுப்பு கருத்துகள் தான் – தில்லியில் 20 பேர் படுகொலைக்கான மூலக் காரணம் ஆகும். இது பல லட்சம் இந்தியர்களை பலிவாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Discussion about this post