வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது.
அடுத்ததாக இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மாபெரும் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கைத்தொடங்கியது. இந்திய அணியின் தவான் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து நின்று விளையாடிய விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி சதம் அடித்தார்.
மறுபுறம் ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்ய அபாரம் காட்டினார். விராட் கோலி 32.6 வது ஓவரில் 140 ரன்களில் வெளியேறினார்.
இதற்கிடையே சதத்தை பூர்த்தி செய்த ரோகித் ஷர்மாவுடன் அம்பத்தி ராய்டு களமிறங்கினார். இருவரும் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். முடிவில் இந்திய அணி 42.1 வது ஓவரில் 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் ஷர்மா 152 ரன்களுடனும், அம்பத்தி ராய்டு 22 ரன்களுடனும் இறுதியில் களத்தில் இருந்தனர். 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Discussion about this post