இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பரவும் ஆபத்து அதிகம் உள்ளதாக 6 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 31 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் இரண்டு பேர், குருகிராம், ஐதராபாத், காசியாபாத் நகரங்களில் தலா ஒருவரும், ஆக்ராவில் 6 பேரும், ஜெய்பூரில் ஒரு இந்தியர் மற்றும் 16 இத்தாலியர் உள்பட 17 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
31வது நபராக டெல்லியில் கொரோனாஉறுதி செய்யப்பட்டவர் உத்தம் நகரைச் சேர்ந்தவர் என்றும் அண்மையில் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்று வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இதுதவிர 13 ஈரானிய சுற்றுலாப் பயணிகள் அமிர்தசரஸ் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் காணொளி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், தனிமைப்படுத்தும் வார்டுகள், ஆய்வகங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பல அமைச்சகங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறித்தி உள்ளது.
Discussion about this post