உலகின் மிக நீளமுள்ள கடல் பாலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் வகையில் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும், இந்த பாலத்தின் மூலம் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு சீனா முழுவதும் 56,500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் உரிமையாளர்கள் உட்பட யாராக இருந்தாலும் தங்கள் வாகனங்களை ஹாங்காங் துறைமுகத்தில் நிறுத்திவிட்டு, இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கார் அதிக செலவு என்று நினைப்பவர்கள் விரைவுப் பேருந்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்பேருந்தில் செல்ல 8-ல் இருந்து 10 டாலர் வரை கட்டணம் செலுத்தவேண்டும். பகலில் செல்லும் நேரத்தைப் பொறுத்து இக்கட்டணம் மாறுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் 9 ஆண்டுகளாக நடைபெற்றது. கடந்த 2016 ஆம் ஆண்டே திறக்கப்பட இருந்தது, ஆனால் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் பாலத் திறப்பு தள்ளிப்போடப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இன்று இப்பாலம் திறக்கப்பட்டது. இந்த நீண்ட கடல் பாலத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் திறந்து வைத்தார்.
Discussion about this post