ராஜஸ்தானில் 31 மலைகள் மறைந்து விட்டதாக அரசு அளித்த அறிக்கையை பார்த்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
ஆரவல்லி மலைத் தொடரில் சட்டவிரோதமாக சுரங்க பணிகள் நடைபெறுவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மலைத் தொடரின் தற்போதைய நிலைமை குறித்து ராஜஸ்தான் அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில் ராஜஸ்தான் மாநில ஆரவல்லி மலைத்தொடரில் 31 மலைப்பகுதிகள் காணவில்லை என்று கூறப்பட்டிருந்தது
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆரவல்லி மலைத் தொடரில் சுரங்க பணிகள் மேற்கொள்வதற்காக ராஜஸ்தான் அரசு, அதன் பங்காக ரூ. 5,000 கோடி பெற்று வருகிறது. எனினும், லட்சக்கணக்கான மக்களின் உயிரை கருத்தில் கொண்டு, 115.34 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் சுரங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். 31 மலைகள் மாயமாகிவிட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மலைகள் தடுப்புச் சுவராக பயன்படுகின்றன. ஆனால் உண்மையில், 15-20 சதவீத மலைப் பகுதிகள் முற்றிலும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. மலையை அழித்து விட்டு என்ன செய்ய போகிறீர்கள்? டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்ததற்கு ஆரவல்லி மலைத்தொடரின் சில பகுதிகள் மறைந்தது கூட காரணமாக இருக்கலாம். ரூ. 5,000 கோடி வருமானம் பெறுவதற்காக, டெல்லியில் உள்ள மக்களின் உயிரை பணயம் வைக்கக் கூடாது. ராஜஸ்தான் அரசு இந்த விவகாரத்தை சாதாரணமாக கையாண்டுள்ளது. அதனால்தான் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டியுள்ளது” என்றனர்.
மேலும், இந்த உத்தரவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராஜஸ்தான் மாநில தலைமை செயலருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சுரங்கங்களில் செம்பு, ஜிப்சம், மார்பிள், லைம்ஸ்டோன், சில்கா, துத்தநாகம், ராக் பாஸ்பேட், சோப்போன் ஆகிய வளம் மிக்க கனிமங்கள் கிடைப்பதால், சட்ட விரோத சுரங்கங்கள் அதிக அளவில் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post