தலை வலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் வீக்கம் வந்து வலி உயிர் போகும் என்பார்கள். அது 100 சதவீதம் உண்மை. பல் வலி வந்தால் தாங்க முடியாது. சரியாக சாப்பிட முடியாது. வீக்கம் உடனடியாக குறையவும் குறையாது. பல் வலி சரியாக பராமரிப்பில்லாமல் இருந்தால் ஏற்படும். பற்களில் சொத்தை, ஈறு பலவீனம், பற்களில் வேர்களில் பிரச்சனை போன்றவை காரணமாக இருக்கும்.
பிஞ்சு கொய்யா இலைகளை பறித்து நன்றாக கழுவி அதனை வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் பற்களில் வலி உள்ள இடங்களில் படுமாறு அடக்கி வைத்திருங்கள். பின்னர் அதனை துப்பி வெதுவெதுப்பான நீரில் கொப்பளித்து விடவும். இப்படி காலை மாலை என இரு வேளை செய்தால் பல் வலி ஓரிரு நாட்களில் குணமாகும்.
பச்சை வெங்காயத்தின் சாறு எடுத்து பல் வலி இருக்குமிடத்தில் தடவினால் வலி குறையும். வெங்காயத்திலுள்ள காரத்தன்மை பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மேலும் பல் சொத்தையையும் தடுக்கும்.
காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு முன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். இவ்வாறு மஞ்சள் நிறம் மறைந்து வெள்ளை நிறம் வரும் வரை கொப்பளிக்க வேண்டும் இப்படி செய்து வந்தால் சில நாட்கள் பற்கள், ஈறுகளில் உள்ள பிரச்சனை குணமாகும்.
இஞ்சிச்சாறு எடுத்து அதில் வெதுவெதுப்பான நீர் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். வீக்கம் குறையும்.
கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்பதால் ஈறுகள் பலமடையும். ஈறு சம்பந்த பிரச்சனைகள் சரியாகும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடுங்கள்.
Discussion about this post