சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா, சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நீடிக்கின்றனர் என்று சிபிஐ செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.‘
மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.
சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.
இதையடுத்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் இன்று டெல்லியில் செய்தியார்களுக்கு விளக்கம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா, சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நீடிக்கின்றனர்.
ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இருவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளதால் இயக்குநருக்கான பணிகள், பொறுப்புகள் நாகேஷ்வர் ராவுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
Discussion about this post