ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய மந்திரி சுரேஷ் பிரபு வலியுறுத்தியுள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத்திற்கு செல்வதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலைய விஐபி பகுதியை நெருங்கியபோது, அவரை நோக்கி வந்த நபர் ஒருவர் திடீரென தன் கையில் வைத்திருந்த சிறிய ரக கத்தியைக் கொண்டு அவரை தாக்கியுள்ளார். இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது கையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த தொண்டர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் தெலுங்கு தேசம் அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய மந்திரி சுரேஷ் பிரபு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்நாட்டு விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபு, இந்த சம்பவத்தை கேட்டபோது மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை தாக்கிய நபர், விமான நிலைய பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post