குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள பிரபல வைர நிறுவனத்தின் தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் 600 ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நான்கு ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கினார்.
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள, சாவ்ஜி டோலாக்யா என்பவரின், ‘ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம், வைர வியாபாரத்துக்கு பிரபலமானது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம், 6,000 கோடி ரூபாய்.
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், தீபாவளியின் போது, விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இதற்கு முன், வீடு, தங்க நகை, பைக் மற்றும் கார்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிறுவனத்தில், சிறு வயதில் பணிக்கு சேர்ந்து, படிப்படியாக முன்னேறி, தலைமை பதவிகளுக்கு வந்த, மூன்று ஊழியர்களுக்கு, சமீபத்தில் விலையுயர்ந்த கார்கள் பரிசளிக்கப்பட்டன.
இந்த ஆண்டு தீபாவளியையொட்டி, வைரம் பட்டை தீட்டும் பிரிவில் உள்ள, 600 பேருக்கு கார்கள், 900 பேருக்கு வங்கி யில் நிரந்தர வைப்பு தொகை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, சூரத் நகரில் நேற்று நடந்தது.
இதன் ஒரு பகுதியாக, மாற்றுத் திறனாளி பெண் உட்பட நான்கு பேருக்கு, டில்லியில் நடந்த விழாவில், பிரதமர் மோடி, கார் சாவியை பரிசாக வழங்கினார்.
Discussion about this post