அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த18 பேரிடமும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மதுரை மாட்டுத்தாவணி, ரிங்ரோட்டில் உள்ள ஓட்டலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார். அப்போது மேல்முறையீடு செய்யவேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
‘மீண்டும் மேல்முறையீட்டுக்கு சென்றால் அதில் தீர்ப்பு வர தாமதமாகும். அது எடப்பாடி- ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு சாதகமாகவே இருக்கும். அதனால் மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம்’ என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர். மற்றொரு தரப்பினரோ இடைத்தேர்தலை சந்தித்தால் பெரும் செலவு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாக தெரிகிறது. இந்த ஆலோசனையின் முடிவில், தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. 18 பேரும் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
Discussion about this post