சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. அத்துடன் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் சிபிஐ அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். பேரணியின் முடிவில் சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்த சிலர் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post