ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில், தோனியை முந்தி விராட் கோஹ்லி சாதனை படைத்துள்ளார். இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது போட்டி டிராவில் முடிந்தது. நேற்று நடைபெற்ற 3வது போட்டியில், 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. கேப்டன் விராட் கோஹ்லி சதம் அடித்தும், மற்ற வீரர்கள் சரியாக விளையாடாததால், இந்திய அணி தோல்வியை தழுவியது. சாதனைமேல் சாதனை படைத்து வரும் விராட் கோஹ்லி, நேற்று 107 ரன்கள் எடுத்ததன் மூலம், ஹாட்ரிக் சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3 போட்டிகளிலும் விராட் சதம் விளாசியுள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்தவர்களின் வரிசையில், தோனியை முந்தியுள்ளார் விராட். ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் தோனி 4வது இடத்தில் உள்ளார். தோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ரன் எடுத்திருந்தார். விராட் 205 இன்னிங்சில் 10,076 ரன் குவித்திருந்தார். தோனியை முந்த அவருக்கு 66 ரன் தேவைப்பட்டது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுடன் நேற்று நடந்த போட்டியில், விராட் 68 ரன்கள் அடித்த நிலையில், தோனியின் சாதனையை முறியடித்தார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் விராட் 4வது இடத்துக்கு முன்னேறினார். சச்சின் 18,426 ரன்னுடன் முதலிடத்தில் உள்ளார். கங்குலி 11363, டிராவிட் 10405 ரன்கள் என அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Discussion about this post