ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், ஜப்பானை 3-2 கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பாகிஸ்தான், கொரியா உள்ளிட்ட 4 அணிகளை வீழ்த்தியது. லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியா, ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
தொடர் வெற்றியை பெற்றுவரும் இந்திய அணி அரையிறுதியில் வலிமையான ஜப்பான் அணியுடன் நேற்று மோதியது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடினர். இதனால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இந்நிலையில், இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில், ஜப்பான் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டியில் நுழைந்தது. இந்திய ஹாக்கி அணியின் தொடர் வெற்றி இந்திய ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post