மைதானத்தில் இருந்த ஸ்கோர் போர்டு தவறாக ரன்களைக் காட்ட சதம் அடித்துவிட்டதாக எண்ணி பேட்டை உயர்த்திக்காட்டிய ரஹானேவை, சுரேஷ் ரெய்னா தடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. தியோதர் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா சி மற்றும் பி அணிகள் நேற்று டெல்லியில் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் இந்தியா சி அணி பேட்டிங் செய்தபோது, அணியின் கேப்டன் ரஹானே 97-வது ரன்னை எடுத்தபோது மைதானத்தில் இருந்த ஸ்கோர் போர்டு, அவர் 100 ரன்கள் அடித்ததாக தவறாக காட்டியது. ஸ்கோர் போர்டைப் பார்த்த அவர், பேட்டை உயர்த்தி சதம் அடித்ததைக் கொண்டாடினார். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
பெவிலியனில் இருந்த சக வீரரான சுரேஷ் ரெய்னா, உண்மையான ஸ்கோரை கவனித்து, ரஹானேவிடம் கையை காட்டி “இன்னும் மூன்று ரன்கள் அடிக்க வேண்டும்” என்று சைகை மூலம் கூறினார். ரஹானே முன்கூட்டியே கொண்டாடியது வீண் போகவில்லை. 144 ரன்கள் அடித்து அணியை 352 ரன்கள் குவிக்கச் செய்தார் அவர். சி அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் இஷான் கிஷானும் சதம் அடித்திருந்தார். இதனால், 29 ரன்கள் வித்தியாசத்தில் பி அணியை சி அணி வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
Discussion about this post