குத்துச்சண்டை வீரரான தினேஷ், குறுகிய காலத்தில் இந்தியாவுக்காக 17 தங்கப்பதக்கம் பெற்று தந்துள்ளார். விபத்தினால் அவரது விளையாட்டு கனவு பறிபோனது. தினேஷ் குமார், வாங்கிய கடனை அடைப்பதற்காக சைக்கிளில் குல்பி ஐஸ் விற்றுக் கொண்டிருக்கிறார். அரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சேர்ந்தவர் குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார். குறுகிய காலமே நாட்டுக்காக அவர் விளையாடியிருந்தாலும் ஒட்டுமொத்தமாக 17 தங்கப்பதக்கம், 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். சாலை விபத்து காரணமாக விளையாட்டில் ஈடுபட முடியாமல் போன தினேஷின் சிகிச்சைக்காக அவரது தந்தை பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.
தினேஷ் குமாரை சர்வதேச போட்டிகள் வரை கொண்டு செல்ல ஏற்கனவே அவரது தந்தை வாங்கிய கடன்கள் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்த நிலையில், சிகிச்சைக்காக மேலும் கடன் வாங்கியது வாழ்க்கையை நடத்தவே சிரமமாகிப்போனது. கடன் நெருக்கடியால் தற்போது தினேஷ், சைக்கிளில் குல்பி ஐஸ் விற்று வருகிறார். “கடன்களை அடைப்பதற்காக ஐஸ் விற்று வருகிறேன். திடீரென நடந்த விபத்தால் என்னால் விளையாட முடியவில்லை. எனக்கு நிலையான வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். என்னால், இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை சிறந்த வீரர்களாக மாற்ற முடியும்” என்று தினேஷ் குமார் கூறியுள்ளார்.
Discussion about this post