கேரளா ஒரு விநோதமான பூமி. அந்த மண்ணின் அரசியலில் திடீர் திடீரென ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிகழும். சிட்டிங் முதல்வர் பினராயியும், மாஜி முதல்வர் உம்மன் சாண்டியும் ஒரே விமானத்தில் ஒன்றாக பயணிப்பார்கள் ஒரு நாள், அடுத்த நாளே பினராயியை போட்டுத் தாக்கி உம்மன் ஒரு அறிக்கை தட்டுவார். அதற்கடுத்த நாள் ரமேஷ் சென்னிதலாவும் அச்சுதானந்தனும் ஒரே டீக்கடையில் கட்டஞ்சாயா சுவைத்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் கேரள அரசியல்.
இந்நிலையில் கண்ணூரில் தயாராகியுள்ள புதிய விமான நிலையம் அடுத்த மாதம் 9-ம் தேதிதான் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒன் டே விசிட்டாக கடந்த சனிக்கிழமையன்று இரவில் கேரளா வந்தார் அமித்ஷா. அவரது விமானம் கண்ணூரின் புதிய விமான நிலையத்தில் இறங்கிக் கொள்ள அனுமதி அளித்தது மார்க்சிஸ்ட் அரசு. பி.ஜே.பி.யும், மார்க்சிஸ்டும் பரம்பரை எதிரிகள். இந்நிலையில் அமித்ஷாவுக்கு இப்படியொரு வசதியை மார்க்சிஸ்ட் அரசு செய்து கொடுத்தது பெரும் ஆச்சரியத்தை கிளப்பியது. ஆனால் இதை மிக கடுமையாய் விமர்சித்துக் கொட்டியது காங்கிரஸ். ’என்ன கேரளாவில் மட்டும் காம்ரேடும், காவிகளும் ரகசிய கூட்டு வைத்துள்ளீர்களா?’ என்றே கேட்டுவிட்டது.
இந்த நிலையில், கண்ணூரில் பி.ஜே.பி. அலுவலகத்தை திறந்து வைத்த அமித்ஷா “சபரி மலை விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக இருப்போம். இதை காயப்படுத்தினாலோ, இதற்கு எதிராக செயல்பட்டாலோ இங்கே ஆளும் கம்யூனிஸ்ட் அரசை தூக்கி எறிவோம்.” என்று ஆவேசப்பட்டுவிட்டு கிளம்பினார்.
இதைக் கேட்டு கன்னாபின்னாவென டென்ஷனாகிவிட்டார் முதல்வர் பினராயி விஜயன். அவருக்காக பேசியிருக்கும் அமைச்சர் தாமஸ் ஐசக், “ஒரு உபசார நோக்கில் அமித்ஷாவுக்கு நல்லது செய்தோம். திறக்கப்படாத விமான நிலையத்தை அவரது வசதிக்காக திறந்து விட்டதற்கு சரியான நன்றிக்கடனை செலுத்தியுள்ளார். ஆட்சியை கலைக்க இவர் யார்? கேரள மக்கள் எங்களைக் கொண்டு வந்துள்ளனர், மக்களின் முடிவை விட பெரியவரா அமித்ஷா? அவரை கண்ணூர் புதிய விமான நிலையத்தில் இறங்கிவிடாமல் அப்படியே ஆகாயத்தில் சுற்ற விட்டிருக்க வேண்டும்.” என்று போட்டுத் தாக்கியுள்ளார்.
ஆனாலும் இது ஓவர்தான் அமித் ஜி!
Discussion about this post