அ.தி.மு.க.வில் பல தலைவர்கள் மெளன சாமிகளாக வலம் வர, சிலரோ தடாலடி தலைவர்களாகவே திரிகின்றனர். அமைச்சர் ஜெயக்குமார் தினமும் தினகரனையும், தி.மு.க.வையும் தெறிக்க விட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு ‘தம்பி பாப்பா’ விவகாரத்தில் அவரை சைலண்டாக்கி விட்டனர். இப்போது அந்த இடத்தில் அதகளம் செய்ய துவங்கியிருப்பவர் லோக்சபா துணை சபாநாயகரான தம்பிதுரைதான்.
கடந்த சில நாட்களாகவே பி.ஜே.பி.யை அநியாயத்துக்கு சீண்டி வருகிறார் தம்பிதுரை! என்கிறார்கள். அதாவது கருணாநிதி மறைவுக்குப் பின் அழகிரி ‘மெளன அஞ்சலி நடத்தினார். அதை மீடியாவினர் வளைத்து வளைத்து செய்தி ஆக்கிக் கொண்டிருந்தனர். அந்நேரத்தில் திடீரென தமிழகத்தை ரெய்டு சுனாமி தாக்கியது. பிற்பாடு இதைப்பற்றி பேசிய தம்பிதுரை “ஸ்டாலினுக்கு உதவவே ரெய்டை நடத்தி, அழகிரி நிகழ்வின் மீதான பார்வையை சிதைத்தது மத்திய அரசு.” என்றார்.
சமீபத்தில் கூட ‘தி.மு.க.வை ஆட்டி வைக்கும் கீ அமித்ஷாவின் கையில் உள்ளது.’ என்றார். ஸ்டாலின் என்னதான் பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைக்க தி.மு.க. தயாராக இல்லை, இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும் தம்பிதுரை அதை கேட்பதாக இல்லை.
இந்நிலையில் இப்போது ‘நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு’ பற்றி பேசியிருப்பவர், ”கடந்த 2004 – க்குப் பின் தேசிய கட்சிகளுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்கவில்லை, வரும் தேர்தலிலும் கூட்டணி எனும் பேச்சுக்கே இடமில்லை.” என்றிருக்கிறார். அதாவது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்தே போட்டியிடும் என்று தம்பிதுரை பேட்டி தட்டியுள்ளார்.
இந்த ஸ்டேட்மெண்ட் பி.ஜே.பி. தரப்பை எரிச்சலடைய வைத்துள்ளதாம். ’ஓ அப்படியா, தனித்து நிக்கப்போறீங்களா?’ என்று டெல்லி லாபிகள் சிலர் தமிழக முதல்வர்களிடம் கிண்டலாய் கேட்டிருக்கிறார்கள். இதனால் தம்பிதுரை மீது கடும் கடுப்பில் இருக்கிறது அ.தி.மு.க. வட்டாரம்.
என்னாகுமோ, ஏதாகுமோ!?
Discussion about this post