திரைப்படங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்படுகிறது. அப்படங்கள் வெளியாகும் அதே நாளில் இணைய தளங்களில் வெளியாகி விடுகிறது. திருட்டு விசிடியை கட்டுப்படுத்த அரசு தரப்பிலும், தயாரிப்பாளர்கள் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் அப்பிரச்னை ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம், திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசித்தனர். பின்னர், திருட்டு விசிடி தயாரிக்கப்படும் தியேட்டர்களுக்கு புதிய படங்களை ரிலீஸ் செய்ய தருவதில்லை என்றும், ஒவ்வொரு தியேட்டரிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், தியேட்டர்களுக்குள் யாரும் கேமரா கொண்டு செல்லாதவகையில் படம்பார்க்க வருபவர்களிடம் சோதனை மேற்கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்கனவே ஒன்றிரண்டு தியேட்டரில் திருட்டு விசிடி படமாக்கப்பட்டதாக கையும் களவுமாக பிடித்து அந்த தியேட்டர்களுக்கு படம் தரக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
தியேட்டரில் படமாக்கப்பட்டு வந்தநிலை மாறி தற்போது படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலேயே காட்சிகளை திருட்டு தனமாக செல்போன் கேமராவில் படமாக்கி அவற்றை இணைய தளங்களில் சிலர் வெளியிட்டு விடுகின்றனர். சில மாதங்களுக்கு முன் 2.0 படத்தில் ரஜினி, அக்ஷய்குமார் தோற்றங்கள் ரகசியமாக படமாக்கப்பட்டு லீக் ஆனது. தற்போது சமந்தா தனது கணவருடன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து தெலுங்கு படமொன்றில் நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. அப்போது படப் பிடிப்பில் சமந்தா, நாக சைதன்யா வீட்டுக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ஒரு காட்சியை யாரோ படமாக்கி அதை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதைக்கண்டு சமந்தா அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்.
Discussion about this post