ஒருநாள் போட்டியில், அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா, சச்சினை முந்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மும்பையில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இப்போட்டியில், அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 137 பந்தில், 4 சிக்சர், 20 பவுண்டரிகள் உட்பட 162 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில், சச்சினை முந்தினார் ரோகித் சர்மா.
சச்சின் 195 சிக்சர்கள் அடித்திருந்ததார். 196 சிக்சர்கள் அடித்த நிலையில், ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். 218 சிக்சர்களை விளாசியுள்ள மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி தொடக்க வீரரான ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் நேற்று தனது 21வது சதத்தை பதிவு செய்தார். இதில், 162 ரன்கள் எடுத்துள்ள அவர், 2013ம் ஆண்டில் இருந்து இந்திய வீரர்களில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை விளாசி வந்துள்ளார். 2018ல் விராத் கோஹ்லி தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக (கேப்டவுன்) 160 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ரோகித் அதை நேற்று முறியடித்தார்.
ஒருநாள் போட்டிகளில் ரோகித் 7வது முறையாக 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். தொடர்ச்சியாக 9வது தொடரில் அவர் சதம் விளாசியுள்ளார். விக்கெட் கீப்பர் தோனி நேற்று 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் 10,000 ரன் சாதனை மைல்கல்லை எட்ட இன்னும் 1 ரன் மட்டுமே தேவை. தற்போது அவர் இந்திய அணிக்காக 330 ஒருநாள் போட்டியில் விளையாடி 9,999 ரன் எடுத்துள்ளார். முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய தொடக்க ஜோடிகள் வரிசையில், ரோகித் – தவான் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளனர். ரோகித் நேற்று தான் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டியபோது சச்சின் – சேவக் இணையின் சாதனை (3916 ரன்) முறியடிக்கப்பட்டது. சச்சின் – கங்குலி ஜோடி 6609 ரன் சேர்த்து முதலிடம் வகிக்கிறது.
Discussion about this post