உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாக குழுவால், இந்திய கிரிக்கெட் அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி குற்றம் சாட்டியுள்ளார். பிசிசிஐ-யின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட, கடந்த ஆண்டு ஜனவரியில் வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழு இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ தற்காலிக நிர்வாகிகள் சி.கே.கண்ணா, அமிதாப் சௌத்ரி உள்ளிட்டோருக்கு முன்னாள் கேப்டனும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவருமான கங்குலி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பாலியல் புகாரில் சிஇஓ ராகுல் ஜோரி சிக்கியதால் பிசிசிஐ-யின் நன்மதிப்பு மீது கேள்வி எழுந்துள்ளது என கூறியுள்ளார். இந்த விவகாரத்தை நிர்வாகக் குழு கையாண்ட விதம் வேதனையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பயிற்சியாளர் நியமனம் போன்ற நிர்வாக முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குறை கூறியுள்ளார். இதே நிலை நீடித்தால், இந்திய கிரிக்கெட் அதலபாதாளத்துக்கு செல்ல நேரிடும் என எச்சரித்துள்ளார். அத்துடன் தற்போதைய பிசிசிஐ-யின் நிலை கவலையளிப்பதாக தெரிவித்துள்ள கங்குலி, பாரம்பரியமிக்க இந்திய கிரிக்கெட்டை மீட்டெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post