ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் 80 நாடுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. ஹவாய் தீவில் வெளியாகும் முதல் தமிழ் படம், வாட்ஸ்அப் ஸ்டிக்கரில் வெளியான தமிழ் படம் என பல சாதனைகளை படைத்து வருகிறது சர்கார். துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்கார். முந்தைய படங்களை தீபாவளி நாளில் வெளியிட்டு வசூலை அள்ளிய முருகதாஸ், இந்தப் படத்தையும் தீபாவளி நாளில் வெளியிடப்போவதாக படப்பிடிப்பு தொடங்கும்போதே அறிவித்தார்.
5 கண்டங்களில் 80 நாடுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்படுவது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படம் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா என வெளிமாநிலங்களிலும், தமிழ் படங்கள் அதிகமாக திரையிடப்படாத போலந்து, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், ஹவாய் தீவு போன்ற வெளிநாடுகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படம் என்ற சாதனையை வசமாக்க சர்கார் காத்திருக்கிறது. ஹவாய் தீவில் வெளியாகும் முதல் தமிழ் படம் சர்கார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கபாலி, மெர்சல் படங்கள் 3,500 அரங்குகளில் திரையிடப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், தீபாவளி நெருங்கும் சமயத்தில் சர்காருக்கான திரையரங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து புதிய சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளது. பில்லா பாண்டி என்ற ஒரே ஒரு படம் மட்டுமே சர்காருடன் தீபாவளியன்று போட்டியிட உள்ளது.
Discussion about this post