தமிழ்சினிமா என்றைக்குமே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும். பாகவதர் காலத்திலிருந்தே இது நிதர்சனம்தான். துவக்கத்தில் முண்டக்கண் ராமச்சந்திரன், தங்கவேலு, நாகேஷ், சுருளிராஜன் போன்றோர் கதையோட்டத்தோடே காமெடி செய்தனர்.
பின் கவுண்டமணி – செந்தில் எரா வந்தபோது கதைக்கு சம்பந்தமில்லாமல் தனி காமெடி டிராக் சீசன் அறிமுகமானது. அது பிறகு வடிவேலு, விவேக் காலம் வரை வந்து சந்தானம், சூரி இப்போது யோகிபாபு வரை தொடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்சினிமாவில் காமெடியில் கொடிகட்டி பறந்தவர்கள் ஹீரோ அவதாரமும் எடுத்தார்கள். இதற்கு என்.எஸ்.கே.விலிருந்து பல உதாரணங்களை சொல்லலாம். நாகேஷ் அப்பாவி ஹீரோவாக சாதித்துவிட்டு பின் மீண்டும் நகைச்சுவைக்கு திரும்பினார். கவுண்டமணியெல்லாம் காமெடியில் உச்சம் தொட்ட நேரத்தில் ஹிரோவாகி, மண்ணைக் கவ்வி பின் மீண்டும் காமெடிக்கு வந்துவிட்டார்.
வடிவேலு ஹீரோவாகி பின் மீண்டும் ஃபார்முக்கு வர முடியாமல் தவிக்கிறார். விவேக் ஃபீல்டு அவுட் ஆன நிலையில் ஹீரோவாக முயற்சித்து தேங்கி நிற்கிறார்.
ஆனால் ‘ஜூனியர் கவுண்டமணி’ என்று பெயர் வாங்கிய சந்தானமோ, காமெடியில் பீக்கில் இருக்கும் போது ஹீரோவானார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே எல்லாம் இப்படித்தான், தில்லுக்கு துட்டு என வரிசையாக சில படங்கள் அவரது பெயரைக் காப்பாற்றின. ஆனால் அதன் பின் சரிவை தொட்டதோடு மட்டுமில்லாமல், சர்வர்சுந்தரம் படம் ரிலீஸாகாமால் கிடக்கிறது. ஓடி ஓடி உழைக்கணும் படம் முடியாமல் இழுக்கிறது, மன்னவன் வந்தானடி டிராப் ஆகிவிட்டது.
இந்த நிலையில், தனக்கு கை கொடுத்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் சீக்வெல்லில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானம் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தப் படத்துக்கு பின் புதிய இயக்குநரான ஜான்சன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஹீரோயின் பாலிவுட்டிலிருந்து வருகிறார். தாரா அலிசாவாம் பேரு.
கலக்குங்க சந்து!
Discussion about this post