மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்ற துணை சபாநாயகரும், கரூர் தொகுதி எம்.பி.யுமான தம்பிதுரை போர்க்கொடி தூக்கியுள்ளார். வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுவார்களே தவிர ஐந்து பைசா கூட ஒதுக்க மாட்டார்கள்! என்று வெளுத்து வாங்கியுள்ளார் மத்திய அரசை.
இந்நிலையில் தம்பிதுரைக்கு எதிராக பி.ஜே.பி.யில் இருந்து சவால்கள் கிளம்பிவிட்டன. அதே கையோடு அ.தி.மு.க. அரசை நோக்கியும் மிரட்டல் வார்த்தைகளை பி.ஜே.பி.யின் மூத்த மற்றும் மிக முக்கிய நிர்வாகிகள் உதிர்க்கத் துவங்கிவிட்டனர்! என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதை நிரூபிக்கும் வகையில், பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் சமீபத்திய வார்த்தைகள் அமைந்துள்ளன என்கிறார்கள். அதாவது ஒரு பேட்டியில், “தமிழக கவர்னர் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும்! என்று தொடர்ந்து குரல்கள் எழுந்து வருகின்றன. அது சாத்தியமா? எஸ்.ஆர்.பொம்மை வழக்குக்கு முன்பு வேண்டுமானால் இது சாத்தியம். மத்திய அரசு நினைத்தால், கவர்னரின் பரிந்துரை மற்றும் 356வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில ஆட்சியை நீக்கிட முடிந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை.
வேண்டுமானால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து வாக்கெடுப்பு நடத்தி நீக்குவதைத் தவிர வேறு என்ன பண்ணிட முடியும்?” என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டுதான் பகீர் என்று ஆகியுள்ளனர் அ.தி.மு.க. அமைச்சர்கள்! காரணம், ராஜாவே ‘ஆட்சியை கலைக்கலாம்!’ எனும் ரீதியில் எடுத்துக் கொடுத்துப் பேசியிருப்பதுதான்.
இனி பி.ஜே.பி.க்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையில் தினம் தினம் பனிப்போர்தான் என்பது தெளிவாகிறது.
Discussion about this post