திருமணமான 5 மாதத்தில் முன்னாள் முதல்வர் லாலுவின் மகன், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சிறையில் இருக்கும் லாலு, தன் மகனை சிறைக்கு வந்து சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி தம்பதியரின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருக்கும், தொழிலதிபர் ஒருவரின் மகளான ஐஸ்வர்யா ராய் என்பவருக்கும் கடந்த மே மாதம் 12ம் தேதி திருமணம் நடந்தது. இத்திருமண விழாவில், பீகார் கவர்னர் சத்ய பால் மாலிக், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின் போது மாநில சுகாதாரத் துறை அமைச்சராக தேஜ் பிரதாப் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பாட்னா குடும்பநல நீதிமன்றத்தில் தன் மனைவி ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். தேஜ் பிரதாப் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த விவரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும், தேஜ் பிரதாபின் தாய் ரப்ரி தேவியைக் காண ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது பெற்றோர் அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கிடையே ராஞ்சி சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், தன்னைப் பார்க்க உடனடியாக வருமாறு தேஜ் பிரதாபுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால், லாலு குடும்பத்தில் மீண்டும் பிரச்னை வெடித்துள்ளது. திருமணமாகி 5 மாதங்களாகியிருக்கிற நிலையில் தேஜ் பிரதாப் விவாகரத்து கோரிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாலுவின் இரண்டாவது மகன் தேஜஸ்வி யாதவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்தான் தற்போது ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் பொறுப்புகளை கவனித்து வருகிறார். இவருடன், அவர்களது சகோதரி எம்பியான மிசா பாரதியும் கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார். தேஜ் பிரதாபின் மாமனார் சந்திரிகா ராய், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாகப் பதவி வகித்து வருகிறார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் லாலு பிரசாத் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பே தேஜ் பிரதாப் தன் மனைவியிடம் விவாகரத்து கோரி பாட்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அவரால் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மனு தாக்கல் செய்துள்ளதாக லாலு குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Discussion about this post