விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 4ஆம் தேதி வெளியான 96 திரைப்படம் ஐந்தாவது வாரமாகத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தின் இசை பரவலான கவனம் பெற்றது. இந்நிலையில் சன் டிவியின் அறிவிப்பு ஒன்று த்ரிஷாவைக் கோபப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியானாலும் 96 திரைப்படத்திற்கான ஆதரவு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. வெளியீட்டிற்குப் பின் ரசிகர்கள் மத்தியில் உருவான வரவேற்பு திரையரங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் படத்திற்கான வசூல் அதிகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நான்காவது வாரமாகத் திரையிடப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் 96 திரைப்படம் பெற்றுள்ளது.
96 திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து த்ரிஷா, “5ஆவது வாரமாக 80% அரங்கம் நிறைந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது. 96 திரைப்படத்தை இவ்வளவு விரைவாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை எங்கள் டீம் விரும்பவில்லை. பொங்கல் பண்டிகைக்கு திரைப்படத்தைத் தள்ளிவைக்குமாறு சன் டிவியைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் 96 திரைப்படத்தை ஒளிபரப்புவதை சன் டிவி தடை செய்ய வேண்டும் என்ற பொருள்படும் படியாக #Ban96MoviePremierOnSunTv என்று ஹேஷ் டேக் போட்டுள்ளார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. 96 திரைப்படத்திற்குத் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு இருந்து வரும் நிலையில் அந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் திரையரங்கிற்கு வரும் கூட்டம் குறையும் நிலை உருவாகும். சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post