சென்னை மெரினா கடற்கரைக்குத் தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். மெரினா கடற்கரை பகுதியில் நீச்சல் குளம் ஒன்று உள்ளது. இந்த நீச்சல் குளத்துக்குப் பின்னால் மணல் பரப்பு உள்ளது. தினமும் அதிகாலையில் ஏராளமான மக்கள் நடைப்பயிற்சிக்காக மெரினா கடற்கரைக்கு வருவார்கள். அப்படி நேற்று (நவம்பர் 4) காலை நீச்சல் குளம் உள்ள மணல் பரப்பு பகுதிக்கு வந்தவர்கள் மணலில் புதைந்த நிலையில், பெண் ஒருவர் இறந்துகிடப்பதைப் பார்த்தனர். உடனே அண்ணா சதுக்கம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற அண்ணா சதுக்கம் போலீசார், பாதி உடல் மணலில் மூடப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையில், கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றினர். உடலின் பல்வேறு இடங்களில் ரத்தக் காயம் இருந்த நிலையில், சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்ததாகக் கூறப்படும் பெண்ணுக்கு 35 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணின் அருகில் பெண்ணின் செருப்பும், ஒரு ஆணின் செருப்பும் ஜோடியாகக் கிடந்தன. கூடவே மதுபாட்டில்களும் அந்தப் பெண்ணின் செல்போனும் இருந்தது. அந்த செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களைக் கொண்டு விசாரணை நடைபெறுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது வழிப்பறி காரணமாகவா என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அண்ணா சதுக்கம் போலீசார்.
Discussion about this post