கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில் துறையில் முதலீடு செய்து வியாபாரத்தை விரிவாக்கம் செய்கிறபோது அத்துறையில் உள்ள சிறு முதலீட்டாளர்கள் அவர்களது ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் முடங்கிப்போவார்கள். தமிழகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் காய்கறி முதல் கம்ப்யூட்டர் வரை வியாபாரம் செய்யும் கடைகளை பிரம்மாண்டமான கட்டடங்களில் தொடங்கியபோது நுகர்வோர் கவனம் முழுவதும் திசை மாறியது. அதுபோன்ற நிலைமையைத் தமிழ் சினிமா தற்போது எதிர்கொண்டுள்ளது.
சர்கார் பட வியாபாரமும், அதன் ரிலீஸ் திட்டமிடலும், அதற்கான முன் திட்டமிடலும் சிறு படத் தயாரிப்பாளர்களை, இரண்டாம் கட்ட நடிகர்கள் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களை நிலைகுலைய வைத்துள்ளது. சர்கார் படத்தின் பட்ஜெட், அதன் பிரம்மாண்டத்தை முன்னிறுத்திப் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டதன் விளைவாக தீபாவளிக்குக் கிடைக்கிற தியேட்டர்களில் படங்களை திரையிடுவோம் என இருந்த தயாரிப்பாளர்களைக்கூடப் பதுங்கி பின்வாங்க வைத்துவிட்டது சர்கார் படம்.
அதிகபட்ச விளம்பரங்கள் மூலம் மனோதத்துவ ரீதியாக மனிதனின் ஆழ் மனதில் அழுத்தமாக ஒரு விஷயத்தைப் பதிய வைக்கும் பாணியை சன் நெட்வொர்க் கையாளும். அந்நிறுவனம் முதன்முறையாக வெளியிட்ட நகுல், சுனைனா நடித்த காதலில் விழுந்தேன் திரைப்படம் சுமாரான படம் என்றாலும் அந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியால் வெற்றிப் படமானது. அன்றைக்கு அதனைத் திரைத் துறையினர் வானளாவப் புகழ்ந்தனர். அதே பாணியை எல்லாத் தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்கத் தொடங்கினர். தொலைக்காட்சிகளில் பட விளம்பரங்கள் இல்லையென்றால் படங்கள் வெற்றி பெறாது என்ற எண்ணம் திரைத் துறையினர் மனதில் ஆழப் பதியக் காரணம் சன் நெட்வொர்க்.
சர்கார் படத்திற்கு அளவுக்கதிகமான விளம்பரங்களும், கதை திருட்டு பஞ்சாயத்தில் ஏற்பட்ட எதிர்மறையான விமர்சனங்களை விளம்பரமாக மாற்றிக்கொண்டதன் விளைவும் சர்கார் படத்துக்கான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாகப் பெருக்கிவிட்டது. வேறு படத்தைத் திரையிடத் திட்டமிட்ட தியேட்டர் உரிமையாளர்களைக்கூட அதிக விலை கொடுத்து சர்கார் படத்தைத் திரையிடத் தூண்டியது சன் நெட்வொர்க்கின் விளம்பர யுக்தி.
கார்ப்பரேட் நிறுவனங்கள் நுகர்வோர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடுகிறபொழுது பொருட்களின் விலை குறையும். ஆனால் சினிமாவில் அதற்கு நேர்மாறாக விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. விஜய் + முருகதாஸ் + ரஹ்மான் + சன் பிக்சர்ஸ் என்கிற பிரம்மாண்டம் தமிழகத்தில் குறைந்தபட்சம் 140 கோடி ரூபாயை தியேட்டர் வசூல் மூலம் எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 1000 திரைகளில் 70% திரைகளில் சர்கார் படத்தை திரையிட ஏற்பாடுகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் பத்து ஓவர், கடைசி ஐந்து ஓவரில் அதிகபட்சமான ரன்களை பேட்ஸ்மேன்கள் எடுப்பது போட்டியில் வெற்றியை உறுதிப்படுத்தும். சினிமாவைப் பொறுத்தவரை, படம் வாங்கிய விலையில் 60% முதல் மூன்று நாட்கள் வசூலில் வந்தாக வேண்டும். இல்லையென்றால் அசலை எடுக்க நீண்ட நாட்கள் படத்தைத் திரையிட்டுப் போராட வேண்டும். படம் சுமார் என்றால் அசலுக்கு ஆபத்து.
சர்கார் படத்தில் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்களால் அசலில் முதல் நாளில் 30% வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அமுல்படுத்தும் போர்ப் படை தளபதிகளாக விஜய் ரசிகர் மன்றத் தலைவர்கள் தமிழகம் முழுவதும் களமிறங்கியுள்ளனர். பட ரிலீஸ் அன்று தனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யக் கூடாது; அதற்காகும் செலவை ஆக்கபூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நாயகன் விஜய்.
சர்கார் ஆடியோ வெளியீட்டில் தான் முதல்வர் ஆனால் ஊழல் லஞ்சத்தை ஒழிப்பேன் எனக் கூறியவர் தன் படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் வாங்கிப் படம் பார்க்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை. அதே போல் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் திரைப்படங்களின் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறதா எனக் கண்காணிக்கப்பட வேண்டும் என்று தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் இதுவரை கூறவில்லை; அதற்கு நடிகர் விஜயும் விதிவிலக்கல்ல. பின்னர் எப்படி 140 கோடி வசூல் செய்வது? தனது சம்பளத்தை 40 கோடியிலிருந்து கூட்ட முடியவில்லை என்றாலும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே!
Discussion about this post