அறிமுகப் படத்தையே வெற்றிப் படமாக்கி நடிப்பிற்காகப் பேசப்பட்டவர் கார்த்தி. தொடர் வெற்றிப் படங்கள் அவருக்குத் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தன. ஆனால் வெற்றிகளைப் போலவே தொடர் தோல்விப் படங்களும் அவரது பட்டியலில் நிறைந்துள்ளன. இந்த ஆண்டில் வெளியான படங்களில் அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. மற்றொரு படத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்துவிடும் முனைப்பில் இறங்கியுள்ளார்.
ரஜத் ரவி ஷங்கர் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு ஜோடியாக இரண்டாவது முறையாக அவர் நடிக்கும் படம் தேவ். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று டீசர் வெளியாகியுள்ளது. இமயமலை, உக்ரைன் உள்ளிட்ட பல படங்களில் தேவ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பனிமலை காட்சிகள், வெளி நாட்டு வீதிகள் உள்ளிட்ட காட்சிகளிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை ஈர்க்கிறது.
“இந்த உலகத்துல வாழ்றதுக்கு பல வழிகள் இருக்கு. யாரோ சொன்னாங்கங்குறதுக்காக புரியாத படிப்பை படிச்சு, விருப்பம் இல்லாத வேலையை செஞ்சு, தெரியாத நாலு பேருட்ட நல்ல பேரு வாங்குறதுக்காக, ஓடி ஓடி உழைச்சு, ஈகோ, ப்ரஷர், காம்பெடிஷன்ல சிக்கி, அரை குறையா லவ் பண்ணி, என்ன நடக்குறதுன்னே தெரியாம வாழ்றது ஒரு வழி. இன்னொரு வழி இருக்கு” என்று நீண்ட வசனம் பேசும் கார்த்தி பைக் ரேஸ், மலையேற்றம் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்.
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் போலீஸ் கதையாக இருந்ததால் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக அது அமையவில்லை. இந்த படத்தில் இருவரும் பங்குபெறும்படியான பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கலர்புல்லான காட்சியமைப்புகள் டீசர் முழுக்க இடம்பெற்றுள்ளன. மாடர்ன் லுக்கில் வரும் கார்த்தி ஆக்ஷன் காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். கபிலன், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதால் விரைவில் இதன் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post