செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த சிம்பு தற்போது இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் அத்தரின்டிகி தாரேதி எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். நடிகைகள் மேகா ஆகாஷ் மற்றும் கேத்ரின் தெரசா ஆகிய இருவரும் இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, பிக் பாஸ் புகழ் மஹத் உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் இதைத் தயாரிக்கிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தீபாவளியன்று வெளியாகும் எனவும் டைட்டில் ‘வி’ என ஆரம்பிக்கும் எனவும் படக்குழு கூறியிருந்தது. அதில் கூறப்பட்டிருந்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ எனும் டைட்டிலே இதற்குத் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு பேசிய வசனத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
கழுத்தில் ஸ்கார்ப் அணிந்து ஒத்தை விரலைக் காட்டியபடி சிம்பு நிற்கும் மாடர்ன் லுக் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் ஒன்றும் சிம்புவுக்குப் புதிதல்ல. எனவே அது பெரிய கவனத்தைப் பெறவில்லை. ஆனால், போஸ்டரில் சுட்டப்பட்டிருக்கும் ‘பொங்கலுக்கு’ எனும் வாசகம்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. காரணம், அஜித்.
சிவா இயக்கத்தில் அவர் நடிக்கும் விஸ்வாசம் பொங்கலுக்கு வருவதாக அதிகாரபூர்வமாகவே கூறப்பட்டுவிட்டது. எனவே அஜித்தின் தீவிர ரசிகராக அறியப்படும் சிம்புவின் படமும் தற்போது போட்டிப் படமாக அறிவிக்கப்பட்டிருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை போக ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியிடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் சுந்தர்.சியைப் பொறுத்தவரை தனது படங்களை கமர்ஷியல் காமெடி கலந்து வெற்றிப் படங்களாக ஆக்கக்கூடிய வித்தை தெரிந்தவர். இந்த மினிமம் கியாரண்டி நம்பிக்கை சிம்புவுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. எனவே ரஜினி, அஜித் போன்றவர்களின் பெரிய படங்களுடன் தனது படத்தை வெளியிட்டு, தனது படம் ஒருவேளை சூப்பர் ஹிட்டாக அமையும் பட்சத்தில் தனக்கு அது மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும், போலவே கோலிவுட்டில் தனது இருப்பையும் நிலை நிறுத்திக்கொள்ளலாம் எனக் கருதியே சிம்பு இந்த மோதல் முடிவை எடுத்திருக்கலாம் என்கிற கோணத்திலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post