தீபாவளி அன்று பொதுவாகவே திமுக தலைமை அலுவலகம் விடுமுறையை போலத்தான் இருக்கும். கலைஞர் தலைவராக இருந்தபோது பொங்கல் அன்றுதான் அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் வாழ்த்து வாங்குவதற்கும், அவரிடமிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டு வாங்குவதற்கும் அலைபாய்ந்து நிற்பார்கள். இந்த வருடம் தீபாவளி அன்று திடீரென திமுக தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்துக்கு வர கொஞ்ச நேரத்தில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும், அக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான டி.கே.ரங்கராஜனும் அறிவாலயத்துக்கு வந்தார்கள். இவர்களின் சந்திப்பு கொஞ்ச நேரம் நீடித்தது.
ஸ்டாலினுடனான சந்திப்பு முடிந்ததும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்து, ‘சீதாராம் யெச்சூரி சென்னை வருகிறார். அப்போது ஸ்டாலினை சந்திக்க விரும்புகிறார். அதுபற்றி பேச வந்தோம்’ என்று கூறினார்கள். அவர்கள் சொன்ன முழு விவரமும் மின்னம்பலத்தில் தனி செய்தியாக வெளிவந்திருக்கிறது.
ஆனால் அவர்கள் அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்ட காரணம் வேறு. இன்று காலை டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளுக்கு டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், ‘திமுக, பாஜக தவிர யாருடனும் நாங்கள் கூட்டணி அமைப்போம். ஏன் அது இடது சாரிகளாக இருக்கட்டும், காங்கிரசாக இருக்கட்டும், மாநிலக் கட்சிகளாக இருக்கட்டும்’ என்றெல்லாம் பேட்டி கொடுத்திருக்கிறார். இதுகுறித்த தனிச் செய்தியும் இன்று மின்னம்பலத்தில் வந்திருக்கிறது. காலையிலேயே டைம்ஸ் ஆப் இந்தியாவில் தினகரன் அளித்திருக்கும் பேட்டியை ஸ்டாலினும் பார்த்திருக்கிறார். தலைமைக் கழக நிர்வாகிகள் சிலரும் இதுபற்றி ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள்.
‘தினகரன் டைம்ஸ் ஆப் இந்தியாவில் இடதுசாரிகளோடு கூட்டணி பற்றி பேசிவருவதாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நீங்க உயர் மட்ட செயல் திட்டக் குழுவில் பேசும்போது திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகள் தொடர்ந்து நீடிக்கும்னு சொன்னீங்க. ஆனா தினகரன் பேட்டியை பார்த்தால் கம்யூனிஸ்டுகள் அவர் கூட பேசிக்கிட்டிருக்காங்களோனு ஒரு டவுட் வருது. ஏற்கனவே தா.பாண்டியன் சசிகலாவுக்கு ரொம்ப நெருக்கமானவர்னு எல்லாருக்கும் தெரியும். இப்போதைய சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசனும் தினகரனும் திருத்துறைப்பூண்டி காரர்கள். ஒருவேளை அவங்க பேசியிருக்கலாம் அல்லது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து யாரும் பேசியிருக்கலாம்’என்று ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்துதான் இன்று முதலில் மார்க்சிஸ்ட் செயலாளரை கூப்பிட்டுப் பேசியிருக்கிறார் ஸ்டாலின். யமஹா போராட்டம், சீதாராம் யெச்சூரி விசிட் பற்றியெல்லாம் பேசியபிறகு கே.பாலகிருஷ்ணனிடம் தினகரனின் பேட்டியில் இடதுசாரிகள் பற்றி பேசியிருப்பதை சுட்டிக் காட்டிக் கேட்டிருக்கிறார். அதற்கு கே.பாலகிருஷ்ணன் நாங்கள் யாரும் தினகரனிடம் தொடர்பில் இல்லை என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்’’
Discussion about this post