தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை தேவேந்திரர் மகன் என்று பெயரிட்டு எடுக்க வேண்டும் என்றும், தேவர் மகன் என்றே பெயரிட்டு எடுத்தால் அப்படம் முடங்கும் என்றும் கமல்ஹாசனுக்கு புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று (நவம்பர் 7) கமல்ஹாசனுக்கு அறிக்கை மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், அதே அறிக்கையில்தான் இந்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
“ தந்தி தொலைக்காட்சியில் பாண்டே உடனான உங்களுடைய பேட்டியை நேற்றுத்தான் பார்க்க முடிந்தது; கடைசியில் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்; நீங்கள் -2 என்ற பெயரில் படம் எடுப்பதாகக் கூறியிருந்தீர்கள். (தேவர் மகனைதான் இப்படிக் குறிப்பிடுகிறார்) ஏற்கெனவே 1993-களில் நீங்கள் எடுத்த அந்த -1 திரைப்படம் தென்தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 1993-ல் வெளியான உங்களது -1 திரைப்படத்தால் விதைக்கப்பட்ட சாதிய விதையால் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையிலும் சாதிப்போர் நடந்துகொண்டே இருக்கிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார் கிருஷ்ணசாமி.
மேலும் அவர், “ உங்களுடைய அந்தப் படத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தேவேந்திரகுல வேளாளர்கள்; அந்த மோதலால் எண்ணற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன; ஒட்டுமொத்த சமுதாயத்தினுடைய சுயமரியாதை பல இடங்களில் கேள்விக்குறியாக்கப்பட்டிருந்தது. உண்மையில் உங்களுடைய அந்தப் படத்தால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உங்களிடம் நாங்கள் நட்ட ஈடே கேட்கவேண்டும்.
நாங்கள் வழக்குப் போட்டிருந்தால் உங்களிடத்தில் இருக்கிற சொத்துக்களே போதாது. எங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்; தேவேந்திரகுல மக்கள் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், அந்தத் திரைப்படம் வந்து போயிற்று. ஆனால், அதேபோன்று பெயரிட்டு இனி எந்தவொரு படத்தையும் தேவேந்திரகுல வேளாளர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். தேவேந்திரகுல இளைஞர்கள் உங்கள் மீது உச்சகட்ட ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தயவு கூர்ந்து இனியொரு விசப் பரீட்சையில் ஈடுபடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணசாமி.
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டதை சுட்டிக் காட்டியுள்ள கிருஷ்ணசாமி, “ நீங்கள் பொது வாழ்விற்கு வந்த பிறகாவது தமிழ்ச் சமுதாயங்களிடையே சமநிலையை உருவாக்கும் பொருட்டும், நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டும் நீங்கள் எடுக்கும் புதிய படத்திற்கு ‘தேவேந்திரர் மகன்’ என்று பெயரிட்டிருக்க வேண்டும். ஆனால், 1993-ல் எந்தப் பெயரில் எடுக்கப்பட்ட படத்தால் சாதிக்கலவரம் உருவாக்கப்பட்டதோ, அதே பெயரில் இப்பொழுது -2 என்று படம் எடுப்பதாகக் கூறுகிறீர்கள். பெயர் மட்டுமே முக்கியம், உள்ளே என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ‘தேவேந்திரர் மகன்’ என்று தங்களுடைய படத்திற்கு பெயரிடுங்கள்.
1993-ல் நீங்கள் எடுத்த அந்த -1 திரைப்படத்திற்கு சமநிலையை உருவாக்கும் வகையில், தற்போது எடுக்கக் கூடிய படத்திற்கு”தேவேந்திரர் மகன்” என்று பெயர் வைத்தால் நீங்கள் உண்மையிலேயே சமநிலையை விரும்பக்கூடிய Centrist-ஆக அனைவராலும் கருதப்படுவீர்கள்.
ஒருவேளை -2 என்று பெயரிடுவதில் நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த தேவேந்திரகுல மக்கள், முன்பு சண்டியருக்குக் கொடுத்த எதிர்ப்புகளைக் காட்டிலும் மிகமிகக் கூடுதலாக எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய சூழல்கள் உருவாகும். உங்களது கொள்கைப்படி மைய அரசியலைக் கையாள வேண்டுமென்றால், மறைக்கப்பட்ட அடையாளத்தை மீட்கப் போராடும் தேவேந்திரகுல வேளாளர்களை அடையாளப்படுத்தி”தேவேந்திரர் மகன்” என்ற பெயரில் படம் எடுங்கள், அது ஓடும்; ஆனால் மகன்–2 என்று படம் எடுத்தால், ஓடாது; மாறாக அது முடங்கும்” என்று எச்சரித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
Discussion about this post