முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலினும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் ஒரே ஓட்டலில் தங்கியதாகவும், இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் அதன்காரணமாகவே தினகரன் மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை என்று அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இதனை மறுத்த தினகரன், ஒரே ஓட்டலில் பல தலைவர்கள் தங்கியிருப்பது புதிதல்ல என்று தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று (நவம்பர் 7) இடைத் தேர்தல் குறித்து அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தொகுதியின் தேர்தல் பணிக் குழுப் பொறுப்பாளரும் அமைச்சருமான தங்கமணி, தேர்தலை எதிர்கொள்வது பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
அப்போது பேசிய தங்கமணி, “18பேரை வைத்துக் கொண்டு திமுகவுடன் இணைந்து இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பின் திட்டம் என்ன ஆனது என்று நமக்குத் தெரியும். தற்போது 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர் . நாங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் வாருங்கள் என்று திமுகவிடம் கூறி அதிமுகவை தோற்கடிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை, எந்த ரகசிய ஒப்பந்தமும் எடுபடாது” என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post