விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது சர்கார். தொடக்க நாட்களில் வசூலில் கோலிவுட்டின் பல முந்தைய சாதனைகளை உடைத்துத் தள்ளியுள்ள இந்தப் படம் இன்னும் சில நாட்கள் கழித்து கணக்கிடும்போது வசூலில் விஜய்யின் கேரியரிலேயே முக்கியமான படமாக இது அமைந்திருக்கும் எனக் கூறிக்கொண்டிருக்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஒரு படமாக மிகவும் தட்டையான திரைக்கதையையும் போதாமைமிக்க காட்சிப்படுத்துதலையும் தன்னளவில் கொண்டுள்ளதாக அறியப்படும் இந்தப் படம் மிகச் சில புதிய விஷயங்களைப் படத்தில் ஆங்காங்கே மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதால் பாராட்டையும் பெற்றுள்ளது. அப்படியாகப் படத்தில் கவனத்தைப் பெற்றுள்ள ஒரு விஷயம் ’49P’ எனும் தேர்தல் விதிமுறை. சொல்லப்போனால் படத்தின் மையக்கதையாக வலம்வருவதே இந்த 49P கான்செப்ட்தான்.
அதன்படி வாக்குச்சாவடியில் வாக்காளர் ஒருவரின் ஓட்டு, கள்ள ஓட்டாகப் போடப்பட்டால் இந்த 49Pயின்படி அவர் மீண்டும் தனது வாக்கை அளிக்க முடியும் எனக் கூறியுள்ளது இந்தப் படம். மக்களிடையே ’49 0′ எனும் விதிமுறை மட்டுமே பரவலான அறிமுகத்தை இதுவரை பெற்றுள்ள நிலையில் இந்தப் படத்தால் தற்போது இந்த 49Pயும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. போலவே இணையத்திலும் இது பேசுபொருளாக மாறியுள்ளது.
இதன் விளைவு, பெருவாரியான மக்களை 49P குறித்து கூகுளில் தேடவைத்துள்ளது. இதனால் கூகுள் ட்ரெண்டிங்கில் இந்த வார்த்தையைத் தேடுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நவம்பர் மாதத்தை மட்டும் கணக்கில் கொண்டால் 5ஆம் தேதி வரை 0வில் இருந்த இந்த கீ வேர்டைத் தேடுவோரின் எண்ணிக்கை சதவிகிதமானது படம் வெளியான 6ஆம் தேதி சரசரவென உயர்ந்துள்ளது. 7ஆம் தேதியோ 6ஆம் தேதியைவிட அதிகம் பேரால் தேடப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் குறிப்பிட்ட இந்த கீ வேர்டை கூகுளில் தேடுவோரில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் புதுச்சேரி இருக்கிறது. இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகியிருப்பதால் ஆந்திரா 3ஆவது இடத்திலும் தெலங்கானா 4ஆவது இடத்திலும் உள்ளது. 5ஆவது இடத்தைக் கேரளா பெற்றுள்ளது. கன்னடத்தில் வெளியாகாததால் அண்டை மாநிலமான கர்நாடகா 6ஆவது இடத்திலேயே உள்ளது.
சினிமாயென்பதைத் தாண்டி தமிழகத்தில் இந்தப் படம் அரசியல் கவனமும் பெற்றுள்ளதால் டெல்லியிலும் இதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லி இந்த லிஸ்ட்டில் 8ஆவது இடத்திலேயே உள்ளது. இந்தப் படம் இந்தியில் வெளியாகவில்லை. போக, டெல்லி தொடர்புள்ள தமிழக அரசியல் புள்ளிகள் தமிழகத்திலேயே இதைத் தேடிக்கொள்ளும் சூழல் இருப்பதால் டெல்லியில் இதைத் தேடுவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
இந்த 49P எனும் வார்த்தை தற்போது கூகுளில் அதிகம் தேடப்படுகிறதுதான். ஆனால் இது போலத் தேடப்படுவதொன்றும் புதிது கிடையாதென்பதே கூகுள் சொல்லும் விஷயம். அதன்படி நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து அப்படியே ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி சென்றால் அதில் 2018க்கு பின்னர் 2016ஆம் ஆண்டே அதிகம் பேரால் இந்த வார்த்தை தேடப்பட்டுள்ளது.
இந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் இந்த வார்த்தையை அதிகம் தேடிய ஏரியாவாக கேரளாவே உள்ளது. இப்பட்டியலில் தமிழ்நாடு 3ஆவது இடத்திலும் டெல்லி 6ஆவது இடத்திலும் உள்ளது. கடைசி 12 மாதங்களை மட்டும் கணக்கிட்டால் 2017ஆம் ஆண்டு டிசம்பரில் அதிகம் பேர் இதைத் தேடியுள்ளனர். இதிலும் கேரள மாநிலமே முன்னணியில் உள்ளது. தமிழகம் 4ஆவது இடத்தில் உள்ளது.
நேற்று வரையிலான (நவம்பர் 7) கணக்கின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் நேற்றுதான் இந்த கீ வேர்டை அதிகம் பேர் கூகுளில் தேடியுள்ளனர். இதுவே சர்காருக்குக் கிடைத்த வெற்றிதான். ஆனால், தமிழ் சினிமாவில் சர்காரைப்போல இந்த 49P எனும் கான்செப்ட் தாங்கி பெரிய அளவிலான எந்தப் படமுமே கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிவந்ததில்லை.
நடிகர் விஜய்க்கு இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள செல்வாக்கினையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அந்தக் கணக்கின்படி பார்த்தால் வரும் நாட்களில் இந்த வார்த்தையைத் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த காலத்தைவிட பன்மடங்கு அதிகரித்திட வேண்டும். அதை இந்த சர்கார் நிகழ்த்திக் காட்டுமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Discussion about this post