விஜய் நடித்து ஏற்கனவே வெளியான படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது தீபாவளி அன்று வெளியிடப்பட்ட சர்கார் திரைப்படம்.
தமிழ்த் திரையுலகில் மாஸ் ஹீரோக்கள் அரசியல் கதையில் நடிப்பது அல்லது அரசியல் வசனங்கள் பேசுவது தற்போது பேஷனாகிவருகிறது. இந்நிலையில் சமகாலத் தமிழக அரசியலைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ள சர்கார் திரைப்படத்தை ஊடகங்கள் தமிழகத்தின் அரசியல், பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினைபோலக் கடந்த பத்து நாட்களாக விவாதப் பொருளாக ஆக்கியிருந்தன.
சமமான போட்டியாளர் களத்தில் இல்லாத நிலையில் தனியாக களமிறங்கிய சர்கார் படம், நியாயமான கட்டணத்தைப் போன்று இரு மடங்கு, மும்மடங்கு விலையில் சட்டத்துக்குப் புறம்பாக டிக்கெட் விற்கப்பட்டு வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
எந்திரன், துப்பாக்கி, தெறி, கபாலி படங்களுக்கு இது போன்று சட்டத்துக்குப் புறம்பாக அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டது. அப்போதும் அது சாதனை நிகழ்வாகவே குறிப்பிடப்பட்டது. அந்தச் சாதனைகளையும் சர்கார் படம் முறியடித்து விட்டதாக ஊடகங்கள் முக்கிய செய்திகளாக அறிவித்துவரும் நிலையில் சட்டத்துக்குப் புறம்பான டிக்கெட் கட்டணத்தில் என்பது சொல்லப்படுவதில்லை.
சென்னை நகரில் 70 திரைகளில் சர்கார் 350 காட்சிகள் திரையிடப்பட்டிருக்கிறது. இதற்கான டிக்கெட் அனைத்தும் விநியோகஸ்தர்களால் மொத்தமாக எடுக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது
சென்னை நகரத்தின் முதல் நாள் மொத்த வசூல் 2.40 கோடி இதில் 70 லட்ச ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் வாங்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு விநியோகப் பகுதியில் முக்கிய வசூல் சென்டராக விநியோக வட்டாரத்தில் குறிப்பிடப்படும் கோயம்பேடு, காஞ்சிபுரம், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள தியேட்டர்களில் குறைந்தபட்சம் 250 முதல் 1500 வரை தியேட்டர் நிர்வாகங்களால் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் 500, 1000 ரூபாய், தூத்துக்குடியில் 300 ரூபாய், நாகர்கோவிலில் 600 ரூபாய், திருச்சியில் 250 ரூபாய் என அந்தந்த ஊர்களின் பொருளாதாரத் தன்மைக்கு ஏற்ப சர்கார் பட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் குறிப்பிட்ட மால் தியேட்டர்களில் மட்டும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் மால் தியேட்டரின் மொத்த டிக்கட்டையும் விநியோகஸ்தர்கள் வாங்கி இரு மடங்கு விலையில் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்த கூத்தும் சென்னையில் நடந்தது.
சர்கார் ரிலீஸ் செய்யப்பட்ட 90% தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்ட திரையரங்குகளில் நேரடியாக, மறைமுகமாக, சட்டத்துக்குப் புறம்பாக டிக்கெட் விற்பனை மூலம் வசூலான தொகை சுமார் 32 கோடி ரூபாய்.
படம் பார்க்க வந்தவர்கள், தியேட்டர் கேன்டின், பார்க்கிங் இவற்றின் மூலம் சுமார் 12 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் பேனர், கட் அவுட், பாலாபிஷேகம், பட்டாசு ஆகியவற்றுக்காக செலவழிக்கப்பட்ட தொகை சுமார் 1 கோடி என்கிறது ரசிகர் மன்ற வட்டார தகவல்.
சர்கார் திரைப்படத்திற்காக தமிழக மக்களும், விஜய் ரசிகர்களும் தீபாவளி அன்று செலவு செய்த தொகை சுமார் 50 கோடி. கார்ப்பரேட் நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட சர்கார் திரைப்படத்தின் வியாபார தகவல், தமிழ்நாட்டில் முதல் நாள் மொத்த வசூல், அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post