சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதற்கு சன் பிக்சர்ஸ் தரப்பில் ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்கு மீடியேட்டராக இருந்தவர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்ரமணியன் தான்.
நேற்றில் இருந்து தமிழகம் முழுவதும் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டம், பேனர்கள் கிழிப்பு என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர் அதிமுகவினர். சில இடங்களில் படக் காட்சிகள் முடிந்து ரசிகர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு தியேட்டரை இழுத்துப் பூட்டிய சம்பவங்களும் நிகழ்ந்தது. இதற்கிடையில் படத் தயாரிப்பு நிறுவனத்திடம் நேற்று ஆளுங்கட்சி தரப்பில் இருந்து சிலர் பேசியிருக்கிறார்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் தரப்பிலோ, ‘இது சென்சார் முடிஞ்சு தியேட்டருக்கு வந்த படம். படத்துல பிரச்னை இருந்தால் சென்சார் அனுமதியே கொடுத்திருக்க மாட்டாங்க. சென்சார் அனுமதி கொடுத்த படத்துல எதுக்கு மறுபடியும் காட்சிகளை நீக்கணும்? என்ன பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்வோம். காட்சிகளை நீக்க முடியாது’ என சொல்லிவிட்டார்களாம்.
அதன் பிறகு இன்று காலை போராட்டங்கள் தீவிரமானது. இந்த சூழ்நிலையில்தான் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார். அவர் கலாநிதி மாறனுடன் பேசியிருக்கிறார். ‘படம் எல்லா ஊரிலும் ரொம்பவே நல்லா போயிட்டு இருக்கு. இந்த நேரத்துல ஆளுங்கட்சியை ஏன் பகைச்சுக்கணும்? அவங்களுக்கு இலவச பொருளை தூக்கி நெருப்புல போடுறாங்கன்னு தான் கோபம். அந்தக் கட்சிகளை மட்டும் நீக்குவாதல எதுவும் ஆகிடாது. அதுவும் இல்லாமல் அந்தக் காட்சிகள் எல்லாமே பாட்டுலதான் வருது. மூணு நாளா மக்கள் பெரும்பாலும் படத்தைப் பார்த்துட்டாங்க. இனி அதை நீக்குவதால எதுவும் ஆகிடப் போறது இல்லை. நீக்கிட்டா இனி பிரச்னை இல்லாமல் படத்தை ஓட்டலாம்.
அதிமுககாரங்க தொடர்ந்து போராட்டம் நடத்துறதால தியேட்டருக்கு வர மக்கள் பயப்படுறங்க.அதுவும் இல்லாமல் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் மட்டும் வாட்ஸ் அப்பிலும் வீடியோவாக பரவிடுச்சு. நாம நீக்கினாலும், அதுமக்களிடம் போய் சேர்ந்துடுச்சு. இன்னும் போய்ட்டுதான் இருக்கும். படத்தை ரிலீஸ் பண்ணிய நாங்களும் நாலு காசு பார்க்கணும். அதனால நீங்கதான் மனசு வைக்கணும்..’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு கலாநிதி தரப்பிலோ, ‘இது நாங்க மட்டும் எடுக்கிற முடிவு இல்லை. முருகதாஸ்கிட்டயும் விஜய்கிட்டயும் இது சம்பந்தமாக பேசிட்டு உங்களுக்கு சொல்றோம்…’ என சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பூர் சுப்பரமணியன் சொன்ன விஷயங்களை முருகதாஸிடமும் , விஜய்யிடமும் சொல்லியிருக்கிறது கலாநிதி தரப்பு. இருவருமே அதற்கு சம்மதம் சொன்னதால், திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசி காட்சிகளை நீக்க சம்மதம் சொல்லியிருக்கிறது கலாநிதி தரப்பு.
அதன் பிறகு திருப்பூர் சுப்ரமணியம்தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் பேசினாராம். ‘இந்த சிக்கலுக்கும் சன் பிக்சர்ஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குனர் ஏதோ சீன் வெச்சுட்டாரு. அவங்க காட்சிகளை நீக்குவதற்கு சம்மதிச்சுட்டாங்க. இதுக்கு மேல போராட்டம் எதுவும் வேண்டாம். பாதிப்பு அவங்களுக்கு இல்லை. எங்களுக்குதான். அதனால நீங்கதான் பேசி இந்த பிரச்னையை முடிச்சு வைக்கணும்..’ என கேட்டிருக்கிறார். அதன்படியே வேலுமணி மற்றவற்றை பேசி முடித்து, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.”
Discussion about this post