2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்துக் எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் அணி சேர்க்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக இயங்கிவருகிறார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திப்பதற்காக, சந்திரபாபு நாயுடு நேற்று (நவம்பர் 9) மாலை சென்னை வந்தார்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த அவரை, பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் சுமார் 1 மணி நேரம் வரை ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் வெளியே வந்த இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டிருக்கிறார். முன்னதாக ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். மோடி ஆட்சியில் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுவருகின்றன. அதனைத் தடுக்க அனைத்து மாநிலங்களின் தலைவர்கள், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீதிமன்றம், சிபிஐ, ஆர்பிஐ உள்ளிட்ட தன்னிச்சையான அமைப்புகளை மிரட்டும் அச்சுறுத்தும் நிலையில்தான் மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது” என்று விமர்சித்தார்.
“இதனைத் தடுக்க பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு, நாடு முழுவதுள்ள எதிர்க்கட்சிகளும், முதல்வர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டிருக்கிறார். இதற்கு திமுகவின் ஆதரவு வேண்டும் என்று என்னிடம் கேட்டுள்ளார். மனப்பூர்வமாக ஆதரவு தெரிவிப்பதாக உறுதி தந்திருக்கிறேன்” என்று தெரிவித்தார் ஸ்டாலின்.
“நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வரும் காலத்தில் டெல்லியில் அனைத்துத் தலைவர்களையும் ஒருங்கிணைந்து கலந்தாலோசித்து, எப்படிப்பட்ட பணிகளில் ஈடுபடலாம் என்பது குறித்து விவாதிக்க இருப்பதாகவும் என்னிடம் கூறியிருக்கிறார். இக்கூட்டத்திற்கு நான் வருவதாக ஒப்புதல் தந்திருக்கிறேன்” என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, “நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் இணையுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தேன். தற்போது ஜனநாயகமும் தேசமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. பாஜகவுக்கு எதிராக அனைவரும் கரம் கோர்த்துச் செயல்பட வேண்டும். சிபிஐ, ஆர்பிஐ ஆகியவற்றின் பெருமையும் புகழும் குலைக்கப்படுகின்றன. அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவை எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டுவதற்காக ஏவிவிடப்படுகின்றன. ஆளுநர்களை தங்கள் விருப்பத்துக்கு மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சியில் பொருளாதாரம் சீர்கெட்டுவிட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் அனைத்தும் வெள்ளையாக்கப்பட்டுவிட்டது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் இணைவார்கள். நான் அனைவரையும் சந்தித்து வருகிறேன். கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ராகுலை சந்தித்தேன். விரைவில் மம்தா பானர்ஜியை சந்திக்கிறேன். அனைவரும் இணைந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். திமுகவுடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. அனைவரையும் ஒரே தளத்தில் இணைக்கும் வேலையைத்தான் நான் செய்துவருகிறேன். அனைவரும் வேறுபாடுகளை களைய வேண்டும், ஏனெனில் நாடு முக்கியது. அதனால்தான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளோம்” என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கூட்டணியை யார் வழிநடத்துவார்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்ப, “கூட்டணியை வழிநடத்த பல தலைவர்கள் உள்ளனர், மோடியைவிட மு.க.ஸ்டாலின்கூட சிறந்தவர்தான். தலைமை குறித்து பின்னர் முடிவு செய்வோம்” என்று பதிலளித்துள்ளார்.
Discussion about this post