தமிழ் சினிமாவில் பிரசாந்துக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. மற்ற ஹீரோக்களுக்கெல்லாம் இல்லாத பெருமையாக இயக்குநர்கள் பரதன், மணிரத்னம், ஷங்கர் படங்களில் ஹீரோவானவர்.
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முதல் தமிழ் ஹீரோ பிரசாந்த்தான். ஷங்கரின் இயக்கத்தில் அவர் நடித்த ஜீன்ஸில் உலக அதிசயங்கள் ஏழிலும் நடித்த பெருமைக்குரியவர். இப்போது தமிழில் அவர் ஹீரோவாக அவரது அப்பா தியாகராஜன் தயாரிப்பில் வெற்றி செல்வன் இயக்கியிருக்கும் ‘ஜானி’ வெளியாகவிருக்கிறது. நம்பிக்கை வைக்கக் கூடிய இயக்குநர் வெற்றி செல்வன் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் ராம்சரண் நடிக்கும் ‘வினய விதேய ராமா’ தெலுங்குப் படத்தில் அவர் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. ஆனால், ஹீரோவாக அல்ல, வில்லனாக என்று சொல்லப்பட்டது. சரி… இதுவொன்றும் புதிதில்லை, ஒரு மொழியில் ஹீரோவாக இருப்பவர்கள் இன்னொரு மொழியில் வில்லனாவது வாடிக்கைதான். இப்படித்தான் கன்னட ஹீரோக்கள் சுதீப்பும், கிஷோரும் இங்கே வில்லனாக நடிப்பார்கள். விஷால் கூட ஒரு மலையாளப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனானார்.
ஆனால், பிரசாந்த் நடிக்கும் படத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.அந்த புகைப்படத்தில் ராம்சரணின் நான்கு நண்பர்களில் ஒருவராக பிரசாந்த் தோற்றமளிக்கிறார். படத்தின் கதை என்னவென்று தெரியாவிட்டாலும் இந்தப் புகைப்படம் பார்த்தவர்கள் “எப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டார்…?” என்று அதிர்ச்சிக்குள்ளாகவே செய்தார்கள்.
Discussion about this post