நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
ரஜினி காந்த், அக்ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தயாராகியுள்ள 2.O திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாராகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பிற மொழி படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தக் கோரி கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டடம் முன்பு நேற்று (நவம்பர் 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வாட்டாள் நாகராஜ் மேளம் அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
பின்னர் வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, “கன்னட படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை உள்ளது. கன்னட திரையுலகை பாதுகாக்க வேண்டுமென்றால், அனைத்துத் திரையரங்குகளிலும் கன்னட படத்தை திரையிட வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படம் வருகிற 29ஆம் தேதி வெளிவருகிறது. இதற்காகக் கர்நாடகத்தில் அனைத்துத் திரையரங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.O படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி காந்த் பேசியதற்காக காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post