தப்பிய விஜய், சிக்கிய முருகதாஸ்
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி மறு தணிக்கை செய்யப்பட்ட சர்கார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து படம் பற்றி எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரிய வழக்கில் வரும் நவம்பர் 27 ஆம் தேதி வரை காவல்துறை கைது செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படம் வெளியாவதற்கு முன்னர் ஒரு சர்ச்சை, வெளியான பின்னர் ஒரு சர்ச்சை என்பது விஜய்யின் இந்த படத்திலும் தொடர்ந்துள்ளது.
நடித்ததோடு என் பணி முடிந்தது
சர்கார் கதை திருட்டு சர்ச்சை போய்க்கொண்டிருந்த போதே பாக்யராஜ் பேசும்போது விஜய் கூறியதாக ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். படத்தில் நடித்ததோடு என் பணி முடிந்துவிட்டது. நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதை எடுங்கள் என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தார். கதை பிரச்சினை மட்டுமல்ல படம் வெளியீட்டை தொடர்ந்து நடைபெற்ற சர்ச்சையிலும் விஜய் விலகி இருந்தார். போராட்டக்காரர்களும் அவரை குறிவைக்கவில்லை. இருப்பினும் சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீண்டும் சர்காரின் இந்த பிரச்சினையில் ஏ.ஆர்.முருகதாஸ் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இலவசங்களை தீயில் போடும் படியான காட்சி அமைத்தது மட்டுமல்லாமல் தானே திரையில் தோன்றி அந்த காரியத்தை செய்ததால் முருகதாஸ் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியது.
இந்நிலையில், தனக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவில் தேசதுரோகம், மக்களை தவறாக வழிநடத்துவது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என ஏ.ஆர் முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 9) காலை மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் தணிக்கை குழுவால் சான்றிதழ் அளிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமானது என்றும், தற்போது சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளையே திரைப்படத்தில் சித்தரித்துள்ளதாகவும், இப்படத்தை பார்த்து பொதுமக்கள் யாரும் அரசுக்கு எதிராக போராடவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரனைக்கு வந்த போது, ஏ.ஆர் முருகதாஸ் மீதான புகாரின் மீது ஆரம்ப கட்ட விசாரனை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் திரைப்படத்தில் முன்னாள் முதலமைச்சரை எதிர்மறை கதாபாத்திரமாக சித்திரித்தும், அவர் வழங்கிய இலவச திட்டங்களை தீயிட்டு எரிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏ.ஆர் முருதாஸ் தரப்பில், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது
கைது செய்ய தடை!
இதை கேட்ட நீதிபதி, “சர்கார் சினிமா தானே. சட்ட ஒழுங்கு பிரச்சனை என்றால் எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? மிக்ஸி, கிரைண்டர் எரித்தது தான் பிரச்சனை என்றால் டிவியை எரித்திருந்தால் திருப்தி அடைந்திருப்பீர்களா?” என கேள்வி எழுப்பினார். மேலும் ஏ.ஆர் முருகதாஸை நவம்பர் 27ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டார். இந்த புகார் மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஏ.ஆர் முருகதாஸுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மாற்றம் செய்யப்பட்ட காட்சிகள்
இவ்வளவு பிரச்சினைகளுக்கு பின் சர்கார் திரைப்படத்தில் மொத்தம் 5 நொடி காட்சிகள் மட்டும் தற்போது நீக்கப்பட்டிருக்கின்றது. இலவச பொருட்களை இயக்குநர் முருகதாஸ் எரிப்பது போன்ற காட்சி நீக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கோமளவல்லி என்கிற உச்சரிப்பில் கோமள என்பது மட்டும் ஒலியிழப்பு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கொசு உற்பத்திக்கு காரணமான பொதுப்பணித்துறை என்கிற வசனத்தில் பொதுப்பணித்துறை என்பது நீக்கப்பட்டிருக்கிறது. இந்த 5 நொடி காட்சிகள் நீக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் சர்கார் தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
விஜய்க்கும் எங்களுக்கும் எந்த பிரச்சினையுமில்லை!
சர்கார் சர்ச்சை தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நடிகர் விஜய்க்கும் தங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார். “சர்கார் படத்துக்கு எந்த பாரபட்சமும் இன்றி சிறப்புக்காட்சி திரையிட அனுமதி அளித்தோம். மெர்சல் படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், முதல்வரை அணுகி விஜய் கோரிக்கை வைத்ததால் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது.
நடிகர் விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. திரைத்துறைக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. அந்தத் துறையில் நிலவிய பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளோம். தமிழகத்தில்தான் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தேன். பல்வேறு தரப்பினரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா இலவச திட்டங்களை அறிவித்தார். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டனர். வில்லிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்ததால் உணர்வுப்பூர்வமான தொண்டர்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க விஜய்யிடம் பேசினேன். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் பிரச்சினை தீர்ந்தது” என்று கூறியுள்ளார்.
Discussion about this post