அஜித்தின் விஸ்வாசம் படத்தை அவரது முந்தைய படமான விவேகத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் எனும் நிறுவனமே தயாரிக்கிறது. விவேகம் படமானது பிரமாண்ட வசூல் எதையும் குவிக்கவில்லையென்றே சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. அதனால் அதற்கும் சேர்த்து இந்தப் படத்தின் வசூல் குவியுமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏ அண்டு பி குரூப்ஸ் (A and P groups) எனும் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் நேற்று (நவம்பர் 10) ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.
தீபாவளிக்குத் திரைக்கு வந்து வசூல் ரீதியாக கோலிவுட்டின் முந்தைய பல படங்களின் சாதனைகளைத் தகர்த்துவருகிறது விஜய்யின் சர்கார். விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏ அண்டு பி குரூப்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. தற்போது விஸ்வாசம் படத்தையும் இதே நிறுவனமே கைப்பற்றியுள்ளதால் இந்த அறிவிப்பு கோலிவுட்டில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் சர்கார் தீபாவளிக்கு வெளியானதால் பல படங்கள் தமது ரிலீஸ் தேதியைத் தள்ளிப்போட்டன. ஆனால், பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசத்துடன் ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட பெரிய படங்களும் வெளியாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் இவற்றுடன் இன்னும் சில படங்களும்கூட வெளியாகலாம். எனவே இந்தப் போட்டிகளைச் சமாளித்து விஸ்வாசம் பெரிய அளவிலான வசூலைக் குவிக்குமா எனும் கேள்வி தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.
Discussion about this post