சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகிவருகிறது விஸ்வாசம். அஜித் மற்றும் சிவா காம்போவில் வந்த முந்தைய படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில் இந்தப் படத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த காம்போவின் இரண்டாவது படமான ‘வேதாளம்’ படம் வெளியாகி இன்று (நவம்பர் 10) மூன்றாவது ஆண்டைத் தொட்டுள்ளது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் விஸ்வாசம் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நேற்று நிறைவுற்றுள்ளது.
அந்த வகையில் படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிக் கவனம் பெற்றுவருகின்றன. பல நாட்களாக இப்படத்திற்காக தாடி, மீசையுடன் வலம்வந்த அஜித் படப்பிடிப்பு நிறைவிற்கு பின்னர் க்ளீன் ஷேவ் லுக்கில் தற்போது உலா வருகிறார்.
படப்பிடிப்பு நிறைவு குறித்து இப்பட ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இப்படத்தின் அட்டகாசமான சண்டைக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு புனேவில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. நடிகர் அஜித், இயக்குநர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ஆண்டனி ரூபன் கூட்டணியில் இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது” எனும் தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் சண்டைக் காட்சிகள் பிரமாண்டமாக அமையவுள்ளதாக முன்னர் கூறப்பட்டு வந்த நிலையில், திலீப் சுப்பராயனின் இந்தப் பதிவும் அதை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. இதனால் வேதாளத்தின் “தெறிக்க விடலாமா?” லெவலில் இதிலும் அஜித் ஸ்டண்ட் செய்திருப்பாரா எனும் எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்துள்ளதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கிவிடப்பட்டு விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post