தமிழக முன்னாள் முதல்வரும், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கப் போவதாக அடுத்தடுத்து சிலர் அறிவித்தனர்.
பிரியதர்ஷினி, லிங்குசாமி, விஜய், பாரதிராஜா ஆகியோர் இயக்கத்தில் தனித்தனியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளது. இதில் பிரியதர்ஷினி இயக்க உள்ள படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கவுள்ளார்.இப்படத்திற்கு தி அயர்ன் லேடி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நித்யா மேனன் ஐஏஎன்எஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த போது இப்படம் பற்றி கூறியுள்ளார். அதில், “இது மிகப்பெரிய படம். பிரியதர்ஷினி என்னிடம் கதை சொன்னபோது மிகவும் பிடித்திருந்தது. கதை குறித்து மிகுந்த கவனத்தோடு அவர் இருக்கிறார். ஒரு பயோபிக் படம் பண்ணும்போது முழுக்க முழுக்க அந்த கதாபாத்திரத்திற்கு நியாயமான, தேவையான நடிப்பை வழங்க வேண்டும் என சொல்லிவிட்டேன். சரியான பாதையில் மிகுந்த நம்பிக்கையோடு பட வேலைகளை பிரியதர்ஷினி செய்துவருகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். அது ஒரு நடிகையாக எனக்கு மிக சுவாரஸ்யமானதாக இருக்கப்போகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் மீடூ இயக்கம் பற்றி கூறும் போது, “மீடூ இயக்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை. ஆனால் பாலியல் அத்துமீறல் போன்ற தவறான விஷயங்களை எதிர்ப்பதற்கு என்னிடம் வேறு வழி உள்ளது. நான் குழுவில் இணைந்து போராட விரும்பவில்லை, அமைதியாக சாதிக்க நினைக்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் பற்றி பேசாததால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என அர்த்தம் இல்லை. நான் மாறுபட்ட அணுகுமுறையை வைத்திருக்கிறேன். வேலையின் மூலமாகவே அதை செய்ய முடியும் என நினைக்கிறேன்.
இதுபோன்ற செய்கைகளினால் சில படங்களிலிருந்து வெளியேறி இருக்கிறேன். நான் பணியாற்றும் இடத்தில் எப்படி இருக்கிறேன், என்னுடைய செயல்பாடுகள் என்ன? மற்றவர்களுடன் எப்படி நடந்துகொள்கிறேன் ஆகியவை இதுபோன்ற விஷயங்களுக்கு நான் எதிரானவள் என்பதை என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு புரியவைக்கும். என்னுடைய படங்களைப் பார்ப்பவர்களுக்கும் அது புரியும்” எனக் கூறியுள்ளார்.
நித்யா மேனன் நடித்துள்ள ப்ரானா என்கிற மலையாள திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக அக்ஷய்குமாரின் மிஷன் மங்கல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.
Discussion about this post