தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் 18 தொகுதிகளிலும் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அமமுக, இதனைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் முதல் தொகுதியாக ஆண்டிப்பட்டியில் இன்று காலை (நவம்பர் 10) அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இதில் கர்நாடக மாநில அமமுக செயலாளர் புகழேந்தி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட கதிர்காமு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மாலை 4 மணியளவில் உண்ணாவிரதத்தை முடித்துவைத்து நிறைவுரையாற்றிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “ஆர்.கே.நகரில் நான் பெற்ற வெற்றி பழனிசாமி-பன்னீர்செல்வம் ஆட்சிக்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. எப்போது தேர்தல் வந்தாலும், அது இடைத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களாக இருந்தாலும் சரி ஆட்சி மாற்றத்தை உருவாக்க மக்கள் காத்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்னத்தை எம்ஜிஆராகவும், ஜெயலலிதாவாகவும் பார்த்த மக்கள், தற்போது துரோகிகளின் உருவத்தில் பார்க்கும் காரணத்தால், இரட்டை இலை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. புதிய சின்னமாக நமக்கு குக்கர் சின்னத்தை தமிழக மக்கள் கொடுத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
“எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று நீதிமன்றம் கூறியிருக்கலாம், ஆனால் மக்கள் மன்றம் அதனை தவறு என்று நிரூபிக்கும்” என்று தெரிவித்த தினகரன், ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியில் தொடங்கிய உண்ணாவிரதம், அவரின் மற்றொரு தொகுதியான ஆர்.கே.நகரில் முடிவடையவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“தேர்தல் வந்தால் 10 ஆயிரம், 20 ஆயிரம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் எவ்வாறு தோல்வி அடைந்தார்களோ, அவ்வாறே 20 தொகுதி இடைத் தேர்தல்களிலும் மக்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள்” என்றும் தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு துணை முதல்வராக இருக்கும், தேனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Discussion about this post