மாரி படத்தையடுத்து தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் கூட்டணி அதன் அடுத்த பாகமாக மாரி-2 எனும் படத்தை உருவாக்கிவருகிறது. முந்தைய படத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்த நிலையில் இதில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப் ஆகியோர் நடித்துள்ளனர். தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ வாயிலாக இதைத் தயாரிக்கிறார்.
யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்பட தொலைக்காட்சி உரிமத்தை மாரி படத்தை வாங்கிய விஜய் டிவி நிறுவனமே வாங்கியுள்ளது. டிசம்பர் மாத இறுதியில் இப்படம் வெளியாகலாம் எனக் கூறப்படும் நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது படக்குழு.
அந்தவகையில் நடிகை வரலட்சுமியின் கதாபாத்திர போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘விஜயா’ எனும் பெயரில் வரும் இவர் தமிழ்நாடு சட்ட மற்றும் நீதித் துறையின் இணை செயலாளர் எனும் கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறார். சண்டக்கோழி, சர்கார் போன்ற படங்களில் மிரட்டல் வில்லியாக நடித்திருந்ததால் இதிலும் அவர் வில்லியாகவேகூட நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான சர்காரில் வரலட்சுமி ஏற்றிருந்த கதாபாத்திரம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்திலேயே இதிலும் நடித்திருப்பதால் இப்படமும் சர்ச்சையைச் சந்திக்கலாம என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.
Discussion about this post