இந்தியாவில் கடந்த ஓராண்டில் 25 நகரங்கள், கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நகரங்களை பொறுத்த வரையில் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியை ராஜமகேந்திரவரம் என்றும், ஒடிசாவில் உள்ள அவுட்டர் வீலரை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தீவு என்றும், கேரளாவில் உள்ள அரிக்கோட்டை அரீகோடு என்றும், அரியானாவில் உள்ள பிந்தாரியை பண்டு-பிந்தாரா என்றும் , நாகலாந்தில் உள்ள சம்பூரை சன்பூரி என்றும் மாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது. நாகலாந்தின் திம்மாபூர் மாவட்டத்தில் கசாரிகயானை பீவிமா என மாற்றுவதற்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் பரிந்துரையும் நிலுவையில் உள்ளது.
ஏனெனில் மேற்கு வங்கத்தின் பெயரை ‘பங்களா’ என்று மாற்றும் பரிந்துரையில் சிக்கல் நிலவுகிறது. ‘பங்களா’ என்பது அண்டை நாடான பங்காளதேஷ் என்பதன் உச்சரிப்பை போல இருப்பதால், அதற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். பெயர் மாற்றக் கோரும் மாநில அரசுகளின் பரிந்துரைகளுக்கு, விதிமுறைகளுக்கு உட்பட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. ரயில்வே, தபால் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு துறை ஆட்சேபம் தெரிவிக்காத பட்சத்தில் பெயர்கள் மாற்ற அனுமதி தரப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலங்களின் பெயரை மாற்ற நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
Discussion about this post